ராகுல் காந்தி 'பப்பு' அல்ல கெட்டிக்காரர்! -ரகுராம் ராஜன்

ராகுல் காந்தி 'பப்பு' அல்ல கெட்டிக்காரர்! -ரகுராம் ராஜன்

பிரபல பொருளாதார நிபுணரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன், அண்மையில் ராகுல் தலைமையில் ராஜஸ்தானில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.

தற்போது மீண்டும் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்ற வந்திருந்த அவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி சிலர் கூறுவதுபோல், ‘பப்பு’ (குழந்தை) அல்ல, அவர் கெட்டிக்காரர், சாதுர்யமானவர். சுறுசுறுப்பாகச் செயல்படக்கூடியவர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியபோது…

“ராகுல் மற்றும் அவரது குடும்பத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அவருடன் பலமுறை நான் பேசியிருக்கிறேன். ஆனாலும், முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுலை சிலர் ஒன்றும் அறியாதவர் (பப்பு) என்று கூறிவருகின்றனர். இது துரதிஷ்டவசமானது. ராகுல்காந்தி இந்த ஒற்றுமை யாத்திரை எதற்கு என்று மக்களிடம் தெளிவாகக் கூறியுள்ளார். இளைஞர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரையும் நேரில் சந்தித்து மக்கள் பிரச்னைகளைக் கேட்டு அறிந்துகொண்டுள்ளார். மக்களும் அவரைப் புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் நினைப்பது போல் அவர் ஒன்றும் அறியாதவர் அல்ல. அவருக்கு எல்லாம் தெரியும், எதை எப்போது செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை நன்கு அறிந்தவர் ராகுல் காந்தி.

2023ஆம் ஆண்டு இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். மத்திய அரசு உஷாராக செயல்படாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். வளர்ச்சிக்கான சீர்திருத்தங்களை செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று இப்போதே கணிப்பது சரியாக இருக்காது. ஆனாலும், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளதால் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது” என்றும் ரகுராம் ராஜன் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com