மாணவிகளைப் போல சீருடை அணிந்து வந்து வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியை!

மாணவிகளுடன் ஆசிரியை  ஜான்வி யாதவ்
மாணவிகளுடன் ஆசிரியை ஜான்வி யாதவ்

ராய்ப்பூரில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவ, மாணவிகளிடம் உறவை பலப்படுத்த நூதனமான வழியை பின்பற்றி வருகிறார். அதாவது மாணவிகள் அணியும் சீருடையைப் போலவே தானும் சீருடை அணிந்து வந்து வகுப்பில் பாடம் நடத்துகிறார். இதன் மூலம் மாணவர்களிடம் சீருடை  அணிவதில் ஒரு ஒழுங்குமுறையையும் ஏற்படுத்தி வருகிறார்.

பொதுவாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சீருடை இருக்கும். சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு தனி சீருடையும், ஆசிரியர்களுக்கு தனி சீருடையும் இருக்கும். ஆசிரியைகள் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் சேலை அல்லது சுடிதார் அணிந்து வருவார்கள். ஆனால், ராய்ப்பூரில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஜான்வி யாதவ் ஒரு நாள் பள்ளிக்கு மாணவிகள் அணியும் சீருடையுடன் வந்து மாணவ, மாணவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

முதல்நாள் ஆசிரியை சீருடை அணிந்து வந்த்தை அதிர்ச்சியுடன் பார்த்த மாணவிகள் பின்னர் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. அடுத்தநாள் முதல் சீருடை அணியாத மாணவ, மாணவிகளும் சீருடை அணிந்து வரத் தொடங்கினர். இந்த புதிய மாற்றம் ஆசிரியை மாணவிகளுக்கிடையிலான வேறுபாடுகளைக் களைந்துவிட்டதாக பலரும் தெரிவித்தனர்.

பள்ளிகளில் ஒரு ஆசிரியையின் பங்கு கல்வி கற்பித்தலுக்கும் அப்பாற்பட்டது என்று ஜான்வி யாதவ் நம்புகிறார். பெரும்பாலான ஏழை மாணவிகள், சமூக பொருளாதார பின்னடைவு காரணமாக சுத்தமான, நேர்த்தியான சீருடைகளை அணிந்து வருவதில்லை. சீருடை அணிவதில் பள்ளி மாணவிகளுக்கு தாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதாலும், சீரூடை அணிவதில் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் தாமும் சீருடை அணிய முடிவு எடுத்ததாக அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை நாம் சொல்லித்தர வேண்டும். ஒழுங்குமுறையை பின்பற்ற வேண்டுமானால் ஆசிரியர்களே ரோல் மாடல்களாக இருக்கவேண்டும். ஆசிரியைகள் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். மாணவிகளிடம் சற்று கடுமையாகவோ அல்லது கோபமாகவோ நடந்து கொள்வதால் எந்த பலனும் ஏற்படாது.

பள்ளி மாணவர்களுக்கு சீருடை என்பது சிறப்பு வாய்ந்தது. அது அவர்கள் மனதில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். நேர்த்தியான சீருடைகள் அணிந்து வகுப்புகளுக்கு வருவது மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்கும். இதை வலியுறுத்தவே நானும் சீருடை அணிந்து வகுப்புகளுக்கு வர முடிவு செய்தேன் என்கிறார் ஜான்வி யாதவ்.

ராய்ப்பூர் அரசு ஆரம்பப் பள்ளியில் 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியையாகப் பணியாற்றி  வருகிறார் ஜான்வி யாதவ். இளம் மாணவர்கள் வாழ்க்கையில் பலவற்றை நேரில் பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள். எனவே எனது நூதனமான முயற்சிக்கு பலன் கிடைத்தது. மாணவர்கள் இப்போது சுத்தமாகவும், நேர்த்தியாகவும் சீருடை அணிந்து பள்ளிக்கு வரவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டுள்ளனர் என்கிறார் அவர்.

நான் தினமும் சீருடை அணிந்து வந்து மாணவிகளுக்கு வகுப்பில் பாடம் நடத்தினால் அவர்களுக்கு சலிப்பு வந்துவிடும். எனவே வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி சீருடை அணிந்துவர முடிவு செய்துள்ளேன் என்கிறார் ஜான்வி. இவர் சீருடை அணிந்து பள்ளிக்கு வருவதை பள்ளி ஊழியர்கள் விநோதமாக பார்க்கிறார்களாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com