பாஜகவில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளு பேரன்!

பாஜகவில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளு பேரன்!

ந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ராஜாஜி. சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராக விளங்கிய இவர், மெட்ராஸ் மாகாணத்தின் முதல்வராகவும், மத்திய உள்துறை அமைச்சராகவும், மேற்கு வங்க மாநிலத்தின் கவர்னராகவும் பணியாற்றி இருக்கிறார்.

தலைமுறை தலைமுறையாக ராஜாஜியின் மொத்த வாரிசுகளுமே காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருந்து வந்த நிலையில், அவரது கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவனும் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். 2001ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த அவர், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி முதல் அவர் காங்கிரஸில் இருந்து சற்றே விலகி இருந்தார்.

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ள சூழலில் ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாஜகவில் என்னை இணைத்ததற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நமது பிரதமர் தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில், பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி. பிரதமர் மோடியின் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய வளர்ச்சி இந்தியாவை பலவீனமான பொருளாதாரத்தில் இருந்து உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ளது.

பிரதமரின், ‘ஆவாஸ் யோஜனா திட்டம்’ மூலம் வீடு பெற்றவர்களை எனக்குத் தெரியும். இப்போது இருக்கும் மத்திய அரசு மக்களுக்கு நேரடியாகத் திட்டங்களை வழங்குகிறது. தவிர, காங்கிரஸ் இப்போது எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் உடன்பட்டேன் என்று சொல்ல முடியாது. இதன் காரணமாகவே தேசிய அளவில் எனக்கு அளித்த பொறுப்பை நான் நிராகரித்தேன். மேலும், ‘பாரத் ஜோடோ யாத்திரை’யில் பங்கேற்பதையும் தவிர்த்தேன்" என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான காலமாகவே இருந்துள்ளது. அதனாலேயே அந்தக் கட்சியில் இருந்த பலரும் தற்போது பாஜகவில் இணைந்து வருகிறார்கள். சமீபத்தில்தான் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராஜாஜியின் கொள்ளுப் பேரனுமான சி.ஆர்.கேசவன் இன்று பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com