வழக்கை எதிர்கொள்ள தயார், பதவி விலக மாட்டேன்: பிரிஜ் பூஷன்!
தன் மீதான விசாரணையை சந்திக்கத் தயார் என்றும் ஆனால், பதவி விலகப் போவதில்லை என்றும் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்து வரும் போராட்டம் தொடர்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் மல்யுத்த வீர்ர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். பப்பு யாதவ், பூபிந்தர் ஹூடா, பிரியங்கா காந்தி, சத்யபால் மாலிக் உள்ளிட்டோர் புதுதில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக்காரர்களை சந்தித்தனர்.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியளித்த பிரிஜ்பூஷண் சிங், சில அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் தமக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். எனினும் எந்த அரசியல் கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்று போராட்டக் காரர்கள் கூறிவருகின்றனர்.
நான் ஆரம்பத்திலிருந்தே இந்த போராட்டத்தின் பின்னணியில் தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் இருப்பதாக கூறிவருகிறேன். இது மல்யுத்த வீர்ர்கள் நடத்தும் போராட்டம் அல்ல. என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும் போராட்டக்காரர்கள் ஏன் போராட்டத்தை தொடர்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் ஏன் பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத்துறைக்கு எதிராக பேச வேண்டும். பப்பு யாதவ், கெஜ்ரிவால் போன்றவர்கள் போராட்டக் களத்துக்கு வர வேண்டிய அவசியம் என்ன? பிரியங்கா காந்திக்கு உண்மை நிலை என்ன என்பது தெரியாது என்று பிரிஜ் பூஷன் கூறினார்.
இதனிடையே இந்த போராட்டத்தை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீர்ர்கள் தெரிவித்தனர். நாங்கள் எந்த அரசியல் கட்சியிடமும் ஆதரவு கேட்கவில்லை. சிலர் நாங்கள் போராடும் இடத்துக்கு வந்து அறிக்கைவிட்டு போராட்டத்தை திசைத் திருப்ப முயலுகின்றனர். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றார் மல்யுத்த வீர்ர் சாக்ஷி மாலிக்.
என் மீதான குற்றச்சாட்டு குறித்து போலீஸில் புகார் தெரிவிக்காமல், விளையாட்டுத்துறை அமைச்சகத்தில் புகார் தெரிவிக்காமல் மல்யுத்த வீர்ர்கள் திடீர் போராட்டத்தில் குதிப்பதன் காரணம் என்ன என்று பிரிஜ் பூஷன் கேள்வி எழுப்பினார்.
போராட்டம் நடத்துவதற்கு முன்பு அவர்கள் என்னை பாராட்டி பேசினர். தங்கள் வீட்டு திருமணத்துக்கு என்னை அழைத்தனர். என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நான் ஒரு எம்.பி. என்பதால் ஒருவரையறைக்கு உட்பட்டுதான் பேச முடியும். இப்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திலும் தில்லி போலீஸாரிடமும் உள்ளது. அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட நான் தயாராக இருக்கிறேன் என்றார் பிரிஜ் பூஷன்.
“விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால், பதவியை ராஜிநாமா செய்யமாட்டேன். நான் ஒன்றும் கிரிமினல் குற்றவாளி அல்ல. நான் பதவியை ராஜிநாமாச் செய்தால், அவர்கள் என்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை நான் ஒப்புக்கொண்டதாகிவிடும். எனது பதவிக்காலம் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 45 நாட்களில் தேர்தல் நடைபெறும். புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டபின் என் பதவிக்காலம் முடிந்துவிடும்” என்றும் பிரிஜ் பூஷன் குறிப்பிட்டார்.
முதலில் என் மீது வழக்கு பதிய வேண்டும் என்றார்கள். அதன்படி வழக்கு பதியப்ட்டுள்ளது. இப்போது நான் பதவியை ராஜிநாமாச் செய்ய வேண்டும் என்றும் என்னை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் போராட்டக்கார்ர்கள் கூறுகிறார்கள். மக்கள் என்னை தொகுதி எம்.பி.யாக (பிரிதிநிதியாக) தேர்ந்தெடுத்திருக்கிறார்களே தவிர வினீத் போகட் அல்ல என்றார் பிரிஜ் பூஷன்.