குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2,000!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2,000!

கர்நாடக மாநிலத்தில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

பா.ஜ.க. தனித்து போட்டியிடும் நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தேர்தல் களத்தை சந்திக்க தயாராகி வருகின்றன. பா.ஜ.க விடமிருந்து எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு முகமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி இந்த மாதம் 16 ஆம் தேதி கர்நாடக மாநிலம் வருகிறார். மகளிர் பேரணியில் பங்கேற்று, மாநாட்டிலும் கலந்துகொள்கிறார். அப்போது பெண்களுக்கான தனி தேர்தல் அறிக்கையை அவர் வெளியிடுவார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கர்நாடகம் வந்து பெங்களூர் பேலஸ் மைதானத்தில் நடைபெற்ற 'நவ நாயகி' தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது "கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2,000 வழங்கப்படும். இந்த தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்துக்கு ‘கிருஹ லெட்சுமி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.5 கோடி குடும்பத் தலைவிகள் பயனடைவார்கள் என்று பிரியங்கா தெரிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு காங்கிரஸின் இரண்டாவது தேர்தல் அறிவிப்பாகும்.

பா.ஜ.க. ஆட்சியில் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருந்ததா? உங்கள் வாழ்வில் மாற்றம் இருந்ததா? என்பதை தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு கல்வியும் அரசு வேலைவாய்ப்பும் வேண்டாமா? அரசியல்தான் உங்களின் பலம். அதை சரியாகப் பயன்படுத்துங்கள்" என்றார்.

எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வு, அன்றாட செலவினங்கள் அதிகரிப்பு பெண்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்தே "கிருஹ லெட்சுமி" திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மகளிர் மேம்பாடு அடைந்தால் குடும்பம் மேம்பாடு அடையும், அதன் மூலம் நாடு மேம்பாடு அடையும் என்கிறது காங்கிரஸ்.

ஆட்சிக்கு வந்தால் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com