சட்டமேலவை இடைத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு!

சட்டமேலவை இடைத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு!

மகாராஷ்டிரத்தில் சட்டமேலவைக்கான இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க. மற்றும் ஷிண்டேயின் சிவசேனை கூட்டணிக்கும் தாக்கரே சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய மகாராஷ்டிர விகாஸ் அகாதிக்கும் இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.

மூன்று ஆசிரியர் தொகுதிகளுக்கும் இரண்டு பட்டதாரிகள் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. கொங்கன் ஆசிரியர் தொகுதியில் 91.02 சதவீதமும் நாசிக் கோட்ட பட்டதாரிகள் தொகுதியில் 49.28 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.

அவுரங்காபாத், நாக்பூர் மற்றும் கொங்கன் கோட்ட ஆசிரியர் தொகுதியில் முறையே 86, 86.23 மற்றும் 91.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாக்பூர் தொகுதியில் எதிர்க்கட்சியான மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி வேட்பாளர், பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்தார்.

கடந்த ஜூன் மாதம் சிவசேனையில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரேயை பதவியிலிருந்து அகற்றிவிட்டு அதிருப்தியாளர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பின் நாக்பூர் தொகுதியில் நடந்துள்ள ஆசிரியர் தொகுதிக்கான சட்டமேலவைத் தேர்தலில் உத்தவ் தாக்கரே ஆதரவு வேட்பாளர் சுதாகர் அத்பலே, பா.ஜ.க. ஆதரவு வேட்பாளர் நகோ கனாரை தோற்கடித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட பிரபலமான தலைவர்களின் சொந்த தொகுதி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாகப்பூரில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் நாக்பூர் தொகுதி தவிர நாசிக் கோட்ட பட்டதாரிகள் தொகுதியும் முக்கியமாக கவனிக்கத் தக்கது. இந்த தொகுதியில் மூன்று முறை உறுப்பினராக இருந்த சுதிர் தாம்பே காங்கிரஸின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர், வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.

அவர் போட்டியிலிருந்து விலகியதால், அவரது மகன் சத்யஜித் தாம்பே சுயேச்சையாக களத்தில் குதித்தார். காங்கிரஸ் கட்சி இருவரையும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில் சத்யஜித் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com