
பா.ஜ.கவை சேர்ந்தவரும் பிலிபிட் தொகுதி எம்.பி.யுமான வருண்காந்தி, சமீபகாலமாக தான் சார்ந்துள்ள பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும் அவ்வப்போது குறைகூறிவருகிறார். இதனால் வருண்காந்தி, பா.ஜ.க.விலிருந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிடக்கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது.
மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் முயற்சியாக நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரை நடத்தி வரும் ராகுல் காந்தி எம்.பி., தனது யாத்திரையை தமிழகத்தில் தொடங்கி, காஷ்மீரில் யாத்திரையை முடிக்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்.
ராகுலின் ஒற்றுமை யாத்திரையை கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீர்ர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தியும் தாம் பயணிக்கும் இடங்களில் எல்லாம் தினமும் ஏதாவது ஒரு செய்தியைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வருண் காந்தி, ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க பா.ஜ.க. ஒருபோதும் அனுமதிக்காது. ஒருவேளை அவர் பங்கேற்றால் அவருக்குதான் பிரச்னை வரும்.
எங்கள் குடும்பத்திற்கு என சில கொள்கைகள் உள்ளன. எங்களுக்கு என்று சில நடைமுறைகள் உள்ளன. நான் வருண் காந்தியை நேசிக்கிறேன். அவரிடம் அன்பு செலுத்துகிறேன். அவரை சந்தித்தால் அவரை கட்டித்தழுவ தயாராக இருக்கிறேன். ஆனால், அவருடையை கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அது நடக்காத காரியம்.
சில ஆண்டுகளுக்கு முன் வருண் என்னிடம், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டிற்கு சேவை செய்து வருவதாக குறிப்பிட்டார். அதற்கு நான், நீ நமது குடும்பத்தின் கொள்கைகள் என்ன என்பதை புரிந்து கொண்டிருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாய்” என்று தெரிவித்திருந்தேன்.
வருண் காந்தி, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டார். அந்த கொள்கைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரால் காங்கிரஸுக்கு வரமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை 21 ஆம் நூற்றாண்டின் கெளரவர்கள் என்றும் எனது கழுத்தை அறுத்தாலும் நான் அவர்களின் அலுவலகத்தில் நுழைய மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளது. விலைவாசியும் உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல் பா.ஜ.க.வுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.