ஆர். எஸ். எஸ் பேரணிக்கு அனுமதி - உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் தீர்வு!

ஆர். எஸ். எஸ் பேரணிக்கு அனுமதி - உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் தீர்வு!

சென்ற ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தது. ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடை செய்ய வேண்டுமென்று திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டதில் உள்நோக்கம் இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன.

பேரணிக்கு அனுமதி தருவதில் சிக்கல் இருந்தது. தமிழகத்தின் 50 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு எந்தவித தடையும் இருக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றமும் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பேரணி நடத்த அனுமதி தரலாம் என்று உத்தரவிட்டது.

சட்டம் ஒழுங்கி பிரச்னையை காரணம் காட்டி, ஆர். எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பேரணியை ஒத்தி வைப்பதாகவும் அனைத்து இடங்களிலும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டது.

இறுதியாக திட்டமிடப்பட்ட 50 இடங்களில் 6 இடங்கள் தவிர மற்ற 44 இடங்களில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் பேரணியை ரத்து செய்துவிட்டு மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு தந்தது. உள்ளரங்குகளில் பேரணி நடத்துவதில் உடன்பாடு இல்லை என்றும், பொதுவிடங்களில் அணி வகுப்பு பேரணியாக நடத்த அனுமதிக்க வேண்டும் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. காவல்துறை விதிகளை பின்பற்றத் தயாராக இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்குகளைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்துள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பக்கூடாது என்று அறிவுரை வழங்கியிருக்கிறது. பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் அதனை முறையாகப் பரிசீலித்து அனுமதி அளிக்க காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்திமுடித்த களத்தில் இறங்கியுள்ளது. தமிழக அரசும், காவல்துறையினரும் ஒத்துழைப்பு தருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்கிறார்கள், ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com