குஜராத்தில் பாலம் இடிந்து 134 பேர் பலியான வழக்கில் தலைமறைவாக இருந்த அஜந்தா வாட்ச் கம்பெனி தொழிலதிபர் சரண்!

குஜராத்தில் பாலம் இடிந்து 134 பேர் பலியான வழக்கில் தலைமறைவாக இருந்த அஜந்தா வாட்ச் கம்பெனி தொழிலதிபர் சரண்!

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் பாலம் இடிந்து பலர் உயிரிழந்த வழக்கில், ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கடந்த அக்டோபர் மாதம் பாலம் இடிந்து விழுந்ததில் 134 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விபத்திற்கு பிறகு தலைமறைவான ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக குஜராத் காவல்துறை அறிவித்ததை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட்டை நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்தது.

இதையடுத்து முன்ஜாமீன் கோரி கடந்த ஜனவரி 20ஆம் தேதி மோர்பி அமர்வு நீதிமன்றத்தில் ஜெய்சுக் படேல் மனுதாக்கல் செய்தார். அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெய்சுக் படேல் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் அஜந்தா நிறுவனத்தின் (ஓரேவா குழுமம்) நான்கு ஊழியர்கள் உட்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி மோர்பி பாலம் விபத்து வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்தியதோடு, ஒரு வாரத்தில் விபத்து குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில உள்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

ஒரேவா குழுமம், அஜந்தா என்ற பிராண்ட் பெயரில் சுவர் கடிகாரங்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்துக்கு மச்சூரு நதியின் குறுக்கே பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட கேபிள் பாலத்தை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, அதாவது பாலம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட நான்காவது நாள் கேபிள்கள் அறுந்து விழுந்ததில் பாலம் இடிந்தது. இந்த சம்பவத்தில் 132 பேர் பலியானார்கள். பாலம் இடிந்த சமயத்தில் அதில் 300-க்கு மேலானவர்கள் சென்றுகொண்டிருந்த்தாக கூறப்படுகிறது.

பாலம் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், கேபிள்கள் துருப்பிடித்தும், பக்கவாட்டில் உள்ள வலைபின்னல் சுவர்களின் இணைப்புகளில் இருந்த ஆணிகள் உடைந்தும், காணப்பட்டன. பாலத்தின் தாங்கு சக்தி என்ன என்பது பற்றி நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்தப்படவில்லை என்று தடயவியல் சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் விபத்துக்கு காரணமான தொழிலதிபரை கைது செய்யாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குஜராத்தில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பா.ஜ.க. அரசு, அந்த தொழிலதிபரை காப்பாற்ற முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com