சச்சின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி போலி “பெல்லி ஃபேட் பர்னர்” விற்பனை!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரில் ‘பெல்லி ஃபேட் பர்னர்’ பொருட்களை விற்பனை செய்யும் இரண்டு போலி இணையதளங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
சருமப் பிரச்சனைகள், முடி கொட்டுதல், உடல் வலி அல்லது இன்னபிற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மூலிகைப் பொருட்களை விற்பதாகக் கூறி அந்த இணையதளங்கள் சச்சின் டெண்டுல்கரின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி வந்துள்ளன.
டெண்டுல்கரின் தனிப்பட்ட உதவியாளர், சச்சின் புகைப்படத்துடன் அந்த இணையதளங்கள் வெளியிட்டுள்ள விளம்பர இணைப்புப் பக்கங்களை கண்டறிந்ததை அடுத்து, அடையாளம் தெரியாத அந்த நபருக்கு எதிராக வியாழக்கிழமை மேற்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை ஒட்டி வழக்குப் பதியப்பட்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
அந்த மோசடி நிறுவனம் தங்களது இணையதளப் பக்கத்தில் போலியாக சச்சின் பெயரைப் பயன்படுத்தி;
‘சச்சின் ஹெல்த் ஐ கேஷ் ஆன் டெலிவரி இன் இந்தியா’
‘சச்சின் ஹெல்த்’ இந்தியாவில் சில உடல், சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களுக்காக மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. எங்களின் தனித்துவமான வலி அல்லது உடல்நலம் தொடர்பான தயாரிப்புகள் மூலம் உங்கள் பணத்திற்கான முழு மதிப்பைப் பெறுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
- என்று குறிப்பிட்டுள்ளனர்.
சச்சினின் தனிப்பட்ட உதவியாளர், தான் அளித்த புகாரில் “சச்சின் டெண்டுல்கரின் பெயர் மற்றும் புகைப்படத்தை ஒரு நிறுவனம் தங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளங்களில் சட்டவிரோதமாகப்
பயன்படுத்துவதை நாங்கள் நேரடியாகப் கண்டுபிடித்தோம். இந்த சட்டவிரோதப் பயன்பாடு சச்சின் மீதான தவறான கருத்து மற்றும் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது.”
- எனத் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரானது கூடுதல் போலீஸ் கமிஷனர் சசிகுமார் மீனாவிடம் (குற்றப்பிரிவு) எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில்,
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 419 (ஆள்மாறாட்டம்), 420 (ஏமாற்றுதல்), 465 (போலி செய்தல்), 467 (மதிப்புமிக்க பாதுகாப்பு மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. 468 (போலியாக ஏமாற்றும் நோக்கம்), 469 (நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்), 471 (உண்மையான ஒரு போலி ஆவணம் அல்லது மின்னணு பதிவாகப் பயன்படுத்துதல்), 500 (அவதூறு), மற்றும் 501 (அவதூறாக அறியப்படும் விஷயத்தை அச்சிடுதல் அல்லது பொறித்தல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு அந்த அடையாளம் தெரியாத நபரைக் கண்டுபிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் போலி இணையத்தளங்களை உருவாக்கியவர் மற்றும் அவை எங்கிருந்து இயக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய விவரங்களைக் கண்காணிக்க இணைய நெறிமுறை விவரங்களையும் சைபர் போலீஸார் கோரியுள்ளனர்.
டெண்டுல்கரின் உதவியாளர் அளித்த புகாரில், “சச்சின் பெல்லி ஃபேட் பர்னர் ஆயிலை பரிந்துரைப்பதாக விளம்பரப்படுத்தப்பட்ட இணையதள இணைப்புகளை (sachinhealth.in மற்றும் shylahealth.in) பார்த்தேன். சமூக ஊடகங்களில் தயாரிப்பு இணைப்பு 'நவீன்' என்ற பயனர் ஐடியால் வெளியிடப்பட்டிருந்தது. 899 ரூபாய் மதிப்புள்ள கொழுப்பைக் கரைக்கும் ஸ்ப்ரேயை ஆர்டர் செய்தால் டெண்டுல்கரின் கையொப்பமிடப்பட்ட டி-சர்ட்டை இலவசமாகப் பெறலாம் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது பெயரில் உருவாக்கப்பட்ட இரண்டு இணையதளங்களில் அவரது புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு, பொதுமக்களை அல்லது வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும், மற்றும் சச்சினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அவரது பெயரை சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன.
- என்பது போன்ற கூடுதல் விவரங்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.