புராதன சின்னத்தில் மது அருந்தினால் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்போம்? வெளிநாட்டினரை எச்சரித்த உள்ளூர்வாசிகள்!

புராதன சின்னத்தில் மது அருந்தினால் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்போம்? வெளிநாட்டினரை எச்சரித்த உள்ளூர்வாசிகள்!

ஹம்பியில் உள்ள புகழ்பெற்ற புரந்தர மண்டபத்தில் பார்ட்டியில் ஈடுபட்ட வெளிநாட்டினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார் அவர்களை எச்சரித்தனர்.

துங்கபத்ரா ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த புனிதத் தலத்தில் ஐந்து பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து மது அருந்துவதும் புகைபிடிப்பதும் உள்ளூர்வாசிகள் கண்களில் பட்டது.

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த புராதன சின்னங்களில் ஒன்றான ஹம்பியின் அருமை தெரியாது வெளிநாட்டுக் கும்பல் செய்து வந்த இந்த அராஜகத்தைப் பார்த்த உள்ளூர்வாசிகள் சிலர் போலிஸுக்குத் தகவல் கொடுத்ததுடன், புனித தலத்திற்கு அருகில் இது போன்ற பார்ட்டிகளில் ஈடுபடக்கூடாது என்றும் அவர்களைக் கேட்டுக் கொண்டனர். உள்ளூர் வாசிகளின் புகாரை ஏற்று போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு தான், சுற்றுலாப் பயணிகள் தங்களிடம் இருந்த மது மற்றும் பிற பொருட்களை கை விட்டனர்.

“புரந்தர மண்டபத்தின் விளிம்பில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர் வெளிநாட்டினர் சிலர். நாங்கள் அவர்களை வீடியோ எடுக்கத் தொடங்கிய பிறகு தான், அவர்கள், தாம் ஏதோ தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோமோ என்று யோசிக்கத் தொடங்கினர். அப்போதும் கூட ‘இங்கு பார்ட்டிக்கு அனுமதி இல்லை என்பதற்கான அறிவிப்புப் பலகை எதுவும் இல்லையே’ என்று சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் வாதிட்டார். சுற்றுலாப் பயணிகளுக்கு விதிகளை விளக்கவே காவல்துறையை நாங்கள் அழைத்தோம்"

- என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.

ஹம்பி ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஹம்பியின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களைப் பார்வையிடுவதைத் தவிர, இங்கு நடைபெறும் பாறை ஏறுதல் (Rock Climbing) மற்றும் நீர் விளையாட்டு (water Sports) நிகழ்ச்சிகள் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டினர் ஹம்பியை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். ஹம்பி அருகே உள்ள துங்கபத்ரா நதியிலும், கொப்பலில் உள்ள ஆனைக்குந்தியிலும் ஏராளமான வெளிநாட்டினர் நீச்சலில் ஈடுபடுகின்றனர்.

பொதுவில் இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஹம்பியின் மலைப்பகுதிகளிலும் சுற்றுப்புறங்களிலும் தாங்களாகவே சுற்றித் திரிவார்கள். சிலசமயம் அவர்கள் வேறு ஏதாவது தகவல்களைப் பெற வேண்டி இங்கிருக்கும்

தகவல் மையத்திற்கு வரும் போதோ அல்லது வாடகைக்குச் சைக்கிள்களைப் பெற முயற்சிக்கும் போதோ நாங்கள் ஹம்பி போன்ற பிரிசித்தி பெற்ற புராதனமான சுற்றுலாத் தலத்தில் ‘செய்ய கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை’ (Dos & Donts) பற்றி அவர்களுக்கு வலியுறுத்துவோம். அவர்கள் குழுவாகச் சுற்றுலா வரும்போது மேற்கண்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. ஹம்பியைச் சுற்றி சிறுத்தைகள் அடிக்கடி நடமாடுவதால், மலைப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தாங்களாகவே செல்வதை நாங்கள் ஊக்கப்படுத்துவதில்லை" என்று சுற்றுலா வழிகாட்டி ஒருவர் தெரிவித்தார்.

ஹம்பி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அவர்கள் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com