சல்மான் ருஷ்டியின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்ட சசி தரூர்!
புகழ்பெற்ற புக்கர் பரிசு வென்ற பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி சமகாலத்தில் வாழும் மகத்தான இந்திய எழுத்தாளர் என்றும் அவருக்கு இனிமேலும் நோபல் பரிசு கிடைப்பதை தாமதப்படுத்த கூடாது என்று காங்கிரஸ் எம்பியும், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் என பன்முக திறமைகள் கொண்ட சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
திடீரென்று சசி தரூர் ஏன் இப்படிப் பாராட்ட வேண்டும்! என்று யோசிக்கிறீர்களா? மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டியின் நாவலான "விக்டரி சிட்டி"யை, சசி தரூர் சமீபத்தில் தான் வாசித்து முடித்திருக்கிறார். அதனுடைய எதிரொலி தான் இந்தப் பாராட்டு. விக்டரி சிட்டி நாவலில் இன்றைய கர்நாடக மாநிலத்தின் வரலாற்று புகழ்மிக்க பண்டைய நகரங்களில் ஒன்றான ஹம்பியின் வரலாற்றை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டது. குறிப்பாக விஜயநகரப் பேரரசைச் சார்ந்த ஹம்பியின் வெற்றிக் கதைகளைப் பற்றி இந்நாவலில் எழுதப்பட்டிருக்கிறது.
//I've just finished Salman Rushdie's magnificent & magical "Victory City" - a fabulous recreation of the history of the Vijaynagar Empire through his magical-realist lens, brilliantly written as always, full of the verve and brio of a writer at the height of his powers," Mr Tharoor tweeted.//
"நான் சல்மான் ருஷ்டியின் அற்புதமான மாயாஜால நாவலான "Victory City (வெற்றி நகரம்)"யை இப்போது தான் வாசித்து முடித்தேன். விஜயநகரப் பேரரசின் வரலாற்றை தனது மேஜிக்கல்-ரியலிஸ்ட் லென்ஸ் மூலமாக ஒரு அற்புதமான பொழுதுபோக்குத் தன்மையுடன் சக்திவாய்ந்த முறையில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார் சல்மான் ருஷ்டி.” - என்று சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.
ஒரு பழங்கால இதிகாசத்தின் மொழிபெயர்ப்பாக வடிவமைக்கப்பட்ட இந் நாவல், ஒரு அற்புதமான சாம்ராஜ்யத்தை உயிர்ப்பிக்கும் ஒரு பெண்ணின் கதையாகும் என குறிப்பிட்டுள்ளார் சசி தரூர்.
மேலும், சமகாலத்தில் நம்மோடு வாழும் மகத்தான இந்திய எழுத்தாளரான சல்மான் ருஷ்டிக்கு மதிப்புமிக்க நோபல் பரிசைப் பெறுவதற்கான நேரம் இது என்றும் இப்போதே காலதாமதமான அந்த நோபல் பரிசானது, வாழும் மகத்தான இந்திய எழுத்தாளருக்கு இனிமேலும் தடுக்கப்படக் கூடாது என சசி தரூர் வலியுறுத்தவும் தவறவில்லை.
முன்னதாக "The Satanic Verses" நாவலை எழுதியதற்காக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி 24 வயது இளைஞர் கத்தியால் தாக்கியதால், பல காயங்களோடு உயிர் தப்பினார். 1981ம் ஆண்டு "மிட்நைட்ஸ் சில்ட்ரன்" புத்தகத்திற்காக இலக்கிய உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான புக்கர் பரிசைப் சல்மான் ருஷ்டி பெற்றார். இந்த நாவல் 1993 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் புக்கர் ஆஃப் புக்கர் எனும் சிறந்த விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.