கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா?: அதிர்ச்சியில் சிவக்குமார்!

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா?: அதிர்ச்சியில் சிவக்குமார்!

ர்நாடகாவின் புதிய முதலமைச்சர் போட்டியில் சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இது சம்பந்தமாக டெல்லியில் ராகுல்காந்தியின் இல்லத்தில் முதலில் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, டி.கே.சிவக்குமாரும் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல் பாதி ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராகவும், அடுத்த பாதி ஆண்டுகள் சிவக்குமார் முதலமைச்சராக இருப்பது எனவும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரிடமும் சோனியா காந்தி தொலைபேசியில் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, டி.கே.சிவக்குமாரை முதலமைச்சராக அறிவிக்கக் கோரி, டெல்லியில் சோனியாகாந்தி இல்லத்துக்கு வெளியே சிவக்குமாரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . ஐந்து ஆண்டுகளும் சிவக்குமாரைத்தான் முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். இதனிடையே, ‘தனக்கு முதல்வர் பதவி தராவிட்டால் சித்தராமையாவுக்கும் தரக் கூடாது‘ என டி.கே.சிவக்குமார் கூறியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு, மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வராக்க பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து டெல்லியில் ஆதரவாளர்களுடன் டி.கே.சிவக்குமார், தனது தம்பி டிகே.சுரேஷ் எம்பி இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில், 24 சதவீதம் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சிவக்குமார் முதல்வராக ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும், மற்றவர்கள் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தச் சூழலில், பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நாளை மதியம் 3.30 மணிக்கு முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com