“ஸ்ரீராமனும் ஹனுமனும் பாஜகவின் காப்புரிமை அல்ல” - பாஜக முக்கிய தலைவரின் கருத்து!

“ஸ்ரீராமனும் ஹனுமனும் பாஜகவின் காப்புரிமை அல்ல” - பாஜக முக்கிய தலைவரின் கருத்து!

மத்தியப் பிரேதச மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த உமாபாரதி, பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டு வந்தார். ஆனால், சமீபகாலமாக அவரது செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் திருப்தியளிக்காத நிலையில் அவர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

உமாபாரதி, முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்தியப் பிரதேசத்தில் மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்பது இவரது நீண்டநாள் கோரிக்கை. இதை வலியுறுத்தி போராட்டம் நடந்தபோது மதுக்கடை மீது கற்களை வீசியவர். இது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹிந்துக்கள் தங்களது வீட்டில் ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும் என்று சமீபத்தில், கர்நாடகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. பெண் எம்.பி.பிரக்யா சிங் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் உமாபாரதி.

வனவாசத்துக்கு போன ஸ்ரீராமர்கூட ஆயுதத்தை கைவிடமாட்டேன் என்று கூறி உடன் எடுத்துச் சென்றார். எனவே ஆயுதங்களை வைத்திருப்பதில் தவறில்லை. தீய எண்ணங்கள்தான் இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

கடந்தவாரம் லோதி சமூகத்தினர் பெருமளவில் பங்கேற்ற கூட்டத்தில் உமா பேசினார். அப்போது, “நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் கூறமாட்டேன். யாருக்கு வாக்களிப்பது என்பதை சூழ்நிலைக்கு தகுந்தவாறு முடிவு செய்யுங்கள்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இதனிடையே சிந்த்வாராவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உமாபாரதி, “பகவான் ஸ்ரீராமரும், ஹனுமனும் பா.ஜ.க.வினருக்கு சொந்தமானவர்கள் அல்ல. ராமர் மீதும் ஹனுமன் மீதும் அவர்கள் பக்தி செலுத்தட்டும். அதற்காக அவர்கள் தங்களுக்குத்தான் சொந்தம் என்று காப்புரிமை கொண்டாட முடியாது என்று பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கமல்நாத், மாநிலத்தில் ஹனுமன் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் உமா பாரதி இவ்வாறு பேசியுள்ளார்.

பதான் படத்தில் வரும் ஆபாச காட்சிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை. இதில் அரசியல் கூடாது. காவி நிறம் இந்திய கலாசாரத்தின் அடையாளம். எனவே பாஜக அரசின் தணிக்கை குழுவினர் ஆபாச காட்சிகளை உடனடியாக நீக்கவேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சி எம்.பி.ராகுல்காந்தி நடத்தி வரும் ஒற்றுமை யாத்திரைக்கு இப்போது தேவையே இல்லை. காங்கிரஸ் கட்சியில்தான் பிளவுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அதற்கு முதலில் அவர்கள் தீர்வுகாணட்டும் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com