நூதன முறையில் பொருள்களை விற்பனை செய்த தெரு வியாபாரி!

நூதன முறையில் பொருள்களை விற்பனை செய்த தெரு வியாபாரி!
Published on

இந்தியாவில் பொருள்களை விற்பவர்கள் அவர்கள் பெரிய வியாபாரிகளாலும் இருந்தாலும் சரி, சிறிய கடைக்கார்ர்களாக இருந்தாலும் சரி… வாடிக்கையாளர்களை கவர நூதனமான விற்பனை முறையை கடைப்பிடிப்பார்கள். மேற்குவங்கத்தைச் சேர்ந்த தெரு வியாபாரியான பூபன் பட்யாகர், “கச்சா பாதம்” பாடலைப் பாடிக்கொண்டே தனது பொருள்களை விற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்போது தெரு வியாபாரி ஒருவரின் நூதனமான விடியோ வைரலாகி பார்வையாளரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த விடியோவை ஐ.பி.எஸ். அதிகாரி தீபான்ஷு கப்ரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சில விநாடிகளே ஓடும் அந்த விடியோவில் அந்த தெருவியாபாரி தன்னிடம் உள்ள பிளாஸ்டிக் கன்டெய்னர்களை, (அவர் அதை காம்லாஸ் என்று குறிப்பிடுகிறார்) சாலையில் மீண்டும் மீண்டும் தூக்கி எறிந்து, இது தரமானது, வளையாதது, உடையாதது என்று கூறி விற்பனை செய்கிறார்.

“விற்பனை உத்தி எந்த அளவுக்கு போயிருக்கிறது பாருங்கள்” என்ற அந்த போலீஸ் அதிகாரி விடியோவின் கீழ் பதிவிட்டுள்ளார்.

அந்த விடியோவில் அது எந்த இடம் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் விடியோவை பார்வையிட்ட பலரும் அந்த இடம் மேற்குவங்கம் என்று சொல்கின்றனர்.

இந்த விடியோவை இதுவரை 43,000- த்துக்கும் மேலானவர்கள் பார்வையிட்டுள்ளனர். 1,302 பேர் அதற்கு லைக்ஸ் போட்டுள்ளனர். மேலும் 200-க்கும் மேலானவர்கள் அதை மீண்டும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். பலரும் அவரின் விற்பனை தந்திரத்தை கண்டு ஆச்சர்யபட்டதுடன் அவரது நம்பிக்கையை பாராட்டியுள்ளனர்.

ஒருவர், “உங்களிடம் விற்பனை செய்யும் பொருள் மீது நம்பிக்கை இருந்தால்தான் இதுபோன்று செய்ய முடியும்” என்று பதிவிட்டுள்ளார். பொருள்களை நூதனமான முறையில் விற்பனை செய்ய இனி பெங்காலியர்களை அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளார். சில பொருள்களை கூவி கூவித்தான் விற்க முடியும். சில பொருள்களை வீடு வீடாகச் சென்றுதான் விற்க முடியும். அந்த வகையில் இவர் பொருள்களின் தரத்தை உறுதிப்படுத்தி நுகர்வோர்களைக் கவர்ந்து விற்பனை செய்து வருகிறார் என்று மூன்றாமவர் பதிவிட்டுள்ளார்.

சிறந்த, தரமான பொருள்களை விற்பனை செய்ய இதுதான் சிறந்த உத்தி. நுகர்வோரிடம் பொருளின் தரத்தை உறுதிப்படுத்தி விற்பனை செய்கிறார் என்று வேறு ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் போபாலில் தின்பண்டங்களை விற்பனை செய்யும் ஒருவர் புதுவிதமான வகையில் ஒலி எழுப்பி தனது பொருள்களை விற்றது சமூக வலைத்தளங்களில் பரவலானது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com