விடுதி வார்டன் மீது புகார் கொடுக்க நடு இரவில் 17 கி.மீ நடைபயணம் சென்ற மாணவிகள்!

விடுதி வார்டன் மீது புகார் கொடுக்க நடு இரவில் 17 கி.மீ நடைபயணம் சென்ற மாணவிகள்!

ஜார்க்கண்ட் மாநிலம், சாய்பாஸாவில், குந்த்பானி என்னுமிடத்தில் கஸ்தூரிபா காந்தி உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள விடுதியின் காப்பாளர் (வார்டன்) மாணவிகளை கொடுமைப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை. மேலும் கீழ் வகுப்பில் படிக்கும் மாணவிகளை விட்டு கழிவறைகளை சுத்தம் செய்யுமாறு வார்டன் கட்டாயப்படுத்துகிறார். குளிர் என்றும் பாராமல் மாணவிகள் தரையில் பாய் விரித்து படுக்க வைக்கிறார். எதிர்ப்பு காட்டினால் மாணவிகளை அடித்து துன்புறுத்துகிறார். உயர் அதிகாரிகள் வந்து கேட்டால் எல்லாம் சரியாக இருக்கிறது. ஒன்றும் பிரச்னை இல்லை என்று பொய் சொல்லுமாறு மாணவிகளை மிரட்டுகிறார் என வார்டன் மீது அடுக்கடுக்கான புகார்களை மாணவிகள் முன்வைத்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலன் இல்லாத நிலையில் மாணவிகள் புகார்களை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.

இதைத் தொடர்ந்து மாணவிகள் 60 பேர் இரவு நேரத்தில் விடுதியை விட்டு வெளியில் வந்து வெறிச்சோடிய சாலைகளில் 17 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு காலை 7 மணி அளவில் மேற்கு சிங்பும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துசேர்ந்தனர். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும், புகார்களையும் துணை கமிஷனர் அனன்யா மிட்டலிடம் தெரிவித்தனர். விடுதியில் உணவு தரமாக இல்லை, மாணவிகளை கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்கின்றனர், தரையில் பாய் விரித்து படுக்கச் சொல்கின்றனர் என்று குறைகளைச் சொல்லி அழுதனர்.

இதையடுத்து துணைகமிஷனர் உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி கண்காணிப்பாளர் அபய்குமார் ஷில் உடனடியாக வரவழைக்கப்பட்டார். அவரும் மாணவிகள் தெரிவித்த புகார்களை பொறுமையாக கேட்டு, புலன் விசாரணை நடத்தி வார்டனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து மாணவிகள் அனைவரையும் பஸ்ஸில் மீண்டும் அவர்கள் படிக்கும் பள்ளிக்கு அனுப்பிவைத்தார்.

முன்னதாக சாய்பாஸாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த மாணவிகள், உள்ளூர் எம்.பி. கீதா கோடாவை செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி பிரச்னையை விவரித்துள்ளனர். அவர், மாவட்ட கமிஷனரிடம் நிலைமையை விவரிக்கவே, துணை கமிஷனர், மாவட்ட கல்வி அதிகாரியிடம் இதுபற்றி விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மாணவிகளின் இந்த செயல் கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com