வருகிறது கோடைக்காலத் திருவிழா; ஏ.சி விலையில் மாற்றம் இருக்குமா?
அடுத்து வரப்போகும் மூன்று மாதங்கள் வழக்கதிற்கு மாறான சூடான வானிலை இந்தியா முழுவதும் இருக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த செய்தி மத்திய, மாநில அரசுகளை விட தனியார் நிறுவனங்களை சுறுசுறுப்பாக்கியிருக்கிறது. ஏ,சி. போன், கூலர் நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தையில் ஏற்றம் பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்து ஒரு வாரமாக முன்னணி ஏ.சி கூலர் நிறுவனங்களான வோல்டாஸ், வோர்ல்பூல், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 5 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது. இம்முறை கோடைக்கால திருவிழா கோலாகலமாக இருககும் என்கிற நம்பிக்கையில் பாசிடிவ் செய்திகள் பரவி வருகின்றன.
கடந்த ஓராண்டாக ஏ.சி. கூலர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்குக் காரணம் மக்கள் மத்தியில் பெரிய அளவு டிமாண்ட் இல்லை. அதே நேரத்தில் மூலப்பொருட்களின் விலையிலும் ஏற்றமோ இறக்கமோ இல்லாத காரணத்தால் விலைகளில் எந்த மாற்றமும் இல்லாத நிலை இருந்தது.
ஒவ்வாரு ஆண்டும் கோடைக்காலத்தில் ஏ.சி வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது உண்டு. அதற்கு ஏற்றபடி நிறுவனங்களும் அதிரடி தள்ளுபடிகளை தருவதுண்டு. இம்முறை சற்று முன்னதாகவே கோடைக்கால தள்ளுபடி ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன. வரப்போகும் கோடை விற்பனையை ஏ.சி நிறுவனங்கள் எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
அடுத்து வரப்போகும் மூன்று மாதங்களுக்கும் ஏ.சி, கூலர் நிறுவனங்களின் மூலப்பொருட்கள் விலை கூடுவதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள். ஆகவே, கோடைக்கால திருவிழாவில் நிறுவனங்களிடமிருந்து அதிக தள்ளுபடியை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள், மார்கெட் அனாலிஸ்ட்கள்.
கடந்த மூன்றாண்டுகளாக இந்தியாவில் விற்பனையாகும் பேன், கூலர், ஏ.சி, பிரிட்ஜ் போன்றவற்றின் தரவுகளை அலசும்போது சில சுவராசியமான டிரெண்டிங் விஷயங்கள் கிடைப்பதாக ஐ.சி.ஐ.சி செக்யூரிட்டீஸ் ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. சாமானியர்களின் மனநிலையில் பெரிய மாற்றங்கள் இருப்பதும் தெரிய வருகிறது.
கோடைக்காலம் மட்டுமல்ல ஆண்டு முழுவதுமே பேன், ஏ.சி. பிரிட்ஜ் போன்றவற்றின் விற்பனை கட்டுக்குள் இருப்பதாகவும், கோடைக்காலத்தில் மட்டும்தான் மக்கள் மத்தியில் ஏ.சி போன்றவற்றிற்கு டிமாண்ட் இருப்பதாக இனி சொல்லமுடியாது என்கிறது ஆய்வு. ஆண்டு முழுவதுமே ஏ.சி, கூலர் போன்ற பொருட்களுக்கு தேவை இருக்கிறது என்கிறார்கள்.
ஆண்டு முழுவதும் விற்பனை உண்டு. விற்பனையில் ஏற்றமோ, இறக்கமோ இல்லை என்பது ஷேர் மார்க்கெட் புள்ளிகளுக்கு சுவராசியமாக இருக்காது. ஏதாவது பரபரப்போ, விறுவிறுப்போ இருந்தால் மட்டுமே நிறுவனங்களின் பங்குகளில் ஏற்றம் இருக்கும்.
அவற்றையெல்லாம் நம்ப வேண்டாம். உங்களுக்கு நிஜமாகவே தேவையென்றால் மட்டும் ஏ.சி வாங்குங்கள். இல்லாவிட்டால், அவசரப்படவேண்டாம் என்கிறார்கள் இன்னொரு தரப்பினர். ஏ.சியெல்லாம் ஆடம்பரப் பொருள் என்பதிலிருந்து அத்தியாவசியப் பொருளாகிவிட்ட நிலையில் வாங்கித்தானே ஆகவேண்டும்!