தேர்தல் ஆணைய நியமனங்கள் குறித்து உச்சநீதிமன்றம் முக்கியமான புதிய உத்தரவு!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on

தேர்தல் ஆணையர்கள் இனி பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலம் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

நாட்டில் தேர்தல் நடைமுறைகளை செயல்படுத்தும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் இக்குழுவின் ஆலோசனையின் பேரிலேயே நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

ஜனநாயக நாட்டில் தேர்தல்கள் முறையாக நடைபெறவேண்டும். இல்லையெனில் அதன் விளைவுகள் மோசமாக அமைந்துவிடும். தேர்தல் ஆணையத்துக்கு தனிப்பட்ட சுதந்திரமான செயலகம் இருக்க வேண்டும், அதற்கென தனி அதிகாரங்கள் உண்டு என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இனி தேர்தல் ஆணையம், தேர்தல் செலவினங்களுக்காக தொகுப்பு நிதியிலிருந்து நேரடியாக பணம் பெற முடியும். இதற்காக பிரதமர் அலுவலகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கத் தேவையில்ல.

இது தொடர்பான வழக்கில் தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயல்பாடுகள் தேவை. அப்போதுதான் நல்ல மனிதர்களை நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்க முடியும் என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வலியுறுத்தி வந்தது.

தற்போது பிரதமர் பரிந்துரையின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களை 6 ஆண்டு காலத்துக்கு குடியரசுத் தலைவர் நியமனம் செய்து வருகிறார். இந்த பதவிக்கு வருபவர்களில் பெரும்பாலும் முன்னாள் அதிகாரிகளாகவே இருப்பார்கள்.

இப்போதெல்லாம் ஆட்சியாளர்களின் விருப்பதிற்கேற்ப தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டுமானால் கொலீஜியம் அடிப்படையில் நியமனங்கள் இருக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

சிபிஐ இயக்குநர், லோக்பால் தலைவர் உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நீதித்துறையின் ஆலோசனையின் பேரிலேயே நியமிக்கப்படுகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல், அதிவேகத்தில் புதிய தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டபோது அது தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், அவரது நியமனம் தொடர்பான கோப்புகளை கேட்டிருந்தது.

1985 ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருண் கோயல், கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி தனது பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே, அதாவது நவம்பர் 19 ஆம் தேதியே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு நவம்பர் 21 இல் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com