சிறைக்குள்ளிருந்து ஒலித்த இனிமையான குரல்!

சிறைக்குள்ளிருந்து ஒலித்த இனிமையான குரல்!

சிலருக்கு இயற்கையிலேயே திறமை இருக்கும். சிலர் எங்கிருந்தாலும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். இதை உறுதிசெய்வதுபோல் சிறைக்கு பின்னால் இருந்து ஒரு குரல் சினிமா பாடல்களை இனிமையாகவும் சிறப்பாகவும் பாடியுள்ளது வைரல் விடியோவாக வெளியாகியுள்ளது.

பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கன்னையா குமார் என்பவர் வேலைத்தேடி பிகார் சென்றார். குடிபோதையில் வந்த அவரை போலீஸார் கைது செய்தனர். பிகார் மாநில சட்டப்படி குடிபோதையில் யாரும் உள்ளே நுழைய முடியாது. இதையடுத்து குடிபோதையில் இருந்த அவரை போலீஸார் கைது செய்து பக்ஸார் சிறையில் அடைத்தனர்.

சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்த அந்த இளைஞர் குடிபோதையினால் ஏற்படும் விபரீதத்தை விவரிக்கும் போஜ்புரி பாடலைப் பாடினார். “தரோகாஜிஹோ… சோச்சி-சோச்சி ஜியா ஹமாரோ கஹே கப்ராதா” என்ற பாடலை அவர் இனிமையாக பாடியதைக் கேட்டு சிறைக்காவலர்கள் வியந்து போய் அவரை பாராட்டினார்கள். மேலும் கன்னையா குமார் பாடிய அந்த பாடல் வடியோவாக டுவிட்டரில் வைரலாக பரவியது.

இதைக்கேட்ட பாலிவுட் பாடகரான அங்கித் திவாரி அந்த விடியோவை பலருக்கும் அனுப்பிவைத்ததுடன் கன்னையாவுக்கு தனது இசைக்குழுவில் பாட வாய்ப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பாடலைக் கேட்ட உ.பி. எம்.எல்.ஏ. ஒருவர் கன்னையாவுக்கு சட்ட உதவி அளிக்கவும், அவரது மறுவாழ்வுக்கும் உதவ முன்வந்துள்ளார். இந்த தகவலையும் அங்கித் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல உ.பி.யில் உள்ள பிரபலமான ஸ்டூடியோவில் பாட்டு பாட வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதுவரை இந்த வைரல் விடியோ 3 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. கன்னையாவின் அசாதாரண திறமையை நெட்சன்கள் பலரும் ஏகமனதாக பாராட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com