குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்தி!

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்தி!

டெல்லியில் வரும் 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்தியும் இடம்பெறவுள்ளது.

டெல்லியில் குடியரசு தின விழா 26ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். முன்னதாக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இதனை கொடியேற்றி துவங்கி வைப்பார். இதனை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் வலிமையை பிரதிபலிக்கும் வகையில் ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு, ராணுவ தளவாடங்களில் அணிவகுப்பு நடைபெறும்.

அத்துடன் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களின் சிறப்பு அலங்கார ஊர்தி அணி வகுப்பும் நடைபெறும். கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்தில் இருந்து சிறப்பு அலங்கார ஊர்தி கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்து. இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சனையை உருவாக்கியது.

இந்த வருடம் வரும் 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த முறை அனுமதி மறுக்கப்பட்ட கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களின் ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

இந்தாண்டு 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது..குறிப்பாக, ஏழு கட்டமாக நடைப்பெற்ற தேர்வுகளில் இறுதியாக ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், குஜராத், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தின் ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு அனுமதிக்க மறுத்த ஊர்திகள், தமிழ்நாடு அரசு நடத்தும் குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த ஆண்டு டெல்லியில் வரும் 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்தியும் இடம்பெறவுள்ளது என்பது தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com