தெலங்கானா ஒரு ஆப்கானிஸ்தான், கேசிஆர் ஒரு தலிபான் - பெண் தலைவர் பேச்சால் சர்ச்சை!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை அவதூறாகப் பேசியதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலன பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்டை மாநிலத்தில் அதாவது ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.
ஜெகனின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா ஒய்எஸ்ஆர்டிபி- ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் சந்திரசேகர ராவின் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிரான விமர்சனத்தை தனது பரப்புரை மூலம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இந்தியாவின் ஆப்கானிஸ்தான் தெலங்கானா. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் கே.சந்திரசேகர ராவ் ஒரு தலிபான் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷிர்மிளா.
மஹபூபாபாதில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு சர்வாதிகாரி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மதிப்பதே இல்லை. அவர் தனக்கென ஒரு சட்டதிட்டத்தை வகுத்துக் கொண்டு சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருகிறார். தெலங்கானா இந்தியாவின் ஆப்கானிஸ்தான் போல் உள்ளது. கே.சி.ஆர். தலிபான் போல் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார்.
முதல்வர் கே.சி.ஆரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினரும் என்னை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். பெண்களை இழிவுபடுத்தி பேசும் அவர்களுக்கு எதிராக அனைத்து பெண்களும் ஒன்று திரள வேண்டும். என்னை பெயர் சொல்லி அழைத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர். அதனால்தான் தெலங்கானா ஒரு ஆப்கானிஸ்தான். அதன் முதல்வர் கே.சி.ஆர். ஒரு தலிபான் என்று கூறுகிறேன் என்றார்.
இதனிடையே சனிக்கிழமை (பிப். 18) மஹபூபாபாதில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஷர்மிளா, தொகுதி எம்.எல்.ஏ.வும் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்தவருமான சங்கர்நாயக்கை கடுமையாக தாக்கிப் பேசினார். கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைகூட அவர் நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டினார். “நீங்கள் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தீர்கள். ஆனால், அவற்றை நீங்கள் நிறைவேற்றவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நீங்கள் ஒரு “கொஜ்ஜா” (ஆண்மையற்றவர்) என்று பேசினார். இவ்வாறு அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஷர்மிளாவை பெண்மையற்றவள், ஆந்திராவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர் என்று எம்.எல்.ஏ. சங்கர் நாயக் விமர்சித்து பேசியதாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே தொகுதி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசிய ஷிர்மிளாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஷர்மிளாவே திரும்பிப் போ என கோஷங்கள் எழுப்பினர். அவரது கட்சி பேனர்களையும் கிழித்து எறிந்தனர்.
இந்த நிலைமை முற்றவே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க தெலங்கானா போலீஸார், எம்.எல்.ஏ. சங்கர் நாயக் மீது அவதூறி கூறியதற்காக ஷர்மிளாவை கைது செய்து வழக்கு போட்டதுடன், அவரை ஹைதராபாதுக்கு அழைத்து சென்றனர்.