பெஸ்ட் தான் பெஸ்ட்!

பெஸ்ட் தான் பெஸ்ட்!

மும்பை பரபர

மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் இருந்து கலை நிகழ்ச்சிகள் அநேகம் நடைபெறும் தேசிய மையம் (NCPA) வரை முதன் முறையாக பெஸ்ட் நிறுவனத்தின் மின்சார ஏ சி டபுள் டெக்கர் பஸ் 21-02-2023 முதல் முறையாக இயக்கப்படவிருக்கிறது. தெற்கு மும்பை வாசிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக அமையுமெனக்  கூறப்படுகிறது.

NCPA பகுதியில் அலுவலகங்களும் உள்ளன. காலை 8.45 மணிக்கு முதல் டபுள் டெக்கர் ஏ.சி. பஸ் (தடம் எண் 113) சி.எஸ்.எம்.டி. முதல் என்.சி.பி.ஏ. இடையே இயங்கும். அலுவலகங்கள் செல்வோரின் நலன்  கருதி  இந்த சேவையை வார நாட்களில் இரவு 10-30 மணி வரை நீட்டிக்க பெஸ்ட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரே நேரத்தில் அதிக பயணிகள் பயணிப்பதற்கு வாய்ப்பாக டபுள் டெக்கர் பஸ் சேவை அமைகிறது. தவிர, நகரைச் சுற்றிப்பார்க்க விரும்பும் பலர் இத்தகைய பஸ்களில் பயணிப்பதை விரும்புகின்றனர்.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத இத்தகைய பஸ் சேவை, எரிபொருள் செலவைக் குறைப்பதோடு, பயணிகளின் வரவேற்பைப் பெறுமென்று எதிர்பார்க்கப்படுவதாக பெஸ்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெயிலுக்கேற்ற கூல் பஸ்!

உயிரைக் காப்பாற்றிய தேசப்பற்று பாடல்!

மும்பை போரிவிலி கிழக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதியில் மராமத்து பணிகள் நடந்தன.

இரண்டு நாட்கள் முன்பு மாலை மூன்று மணியளவில் அங்கிருந்த மூங்கில் சாரத்தின் உதவியுடன், ஒரு நபர் மூன்றாவது தளத்தில் இருக்கும் பால்கனியில் ஏறியுள்ளார்.

பிறகு அங்கிருந்து இறங்கத் தெரியாமல் சிக்கிக் கொண்டுவிட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் எனக் கூறப்பட்டது. அவரை மீட்க போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலிசார், அந்த வாலிபரிடம் ஜன்னல் வழியாக பேச்சுக் கொடுக்கையில், வாலிபர் நீ என்னுடைய தாயா? எனக் கேட்க, கான்ஸ்டபிள் ஆமாம் என்று பதில் கூறியுள்ளார். பின்னர், தான் ராணுவத்தில் சேர விரும்புவதாக அவர் தெரிவித்தும், சரி உன்னை சேர்த்து விடுகிறேன் என கான்ஸ்டபிள் பதில் அளித்துள்ளார்.

இறுதியில் தேசப்பற்று மிகுந்த பாடல் ஒன்றைப் பாடும்படி மனநலம் பாதித்த நபர் கூற, கான்ஸ்டபிளும் பாடி இருக்கிறார். அவர் அதை ரசித்துக்கேட்கும் சமயம், ஜன்னல் வழியே வாலிபரது கையைப் பிடித்து, தான் வைத்திருந்த கயிற்றை அவரது கையில் கட்டிவிட்டார்.

இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் போலிசார், சுமார் ஒன்றரை மணிநேரம் போராட்டத்திற்குப் பின் அவரை பத்திரமாக மீட்டு, அவரது உறவினர்களிம் சேர்த்துவிட்டனர். போலிசாரின் சாதுர்யமான செயல் சூப்பர்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com