சென்ற வருட பட்ஜெட் உரையை இந்த வருடமும் வாசித்த முதல்வர்!

சென்ற வருட பட்ஜெட் உரையை இந்த வருடமும் வாசித்த முதல்வர்!
Published on

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மிகப்பெரிய மாநிலம் என்ற பெருமை ராஜஸ்தானுக்கு உண்டு. அந்த மாநிலத்துக்கு இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரும் பொதுத்தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் காங்கிரஸ் கட்சியும், எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற தவிப்பில் பாஜகவும் அடுத்தடுத்து காய் நகர்த்தும் வேலைகளைச் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்காக பட்ஜெட் தாக்கல் இன்று அம்மாநில சட்டப்பேரவையில் நடைபெற்றது. அம்மாநிலம் பொதுத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளதால் பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் இருக்கும் என்று பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது.

நிதித்துறை பொறுப்பையும் முதல்வர் அசோக் கெலாட்டே வைத்திருந்ததால் அவரே இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டசபைக்கு வந்து வாசிக்கத் தொடங்கினார். அந்த உரை சில நிமிடங்கள் வாசிக்கப்பட்டவுடன் அமைச்சர் மகேஷ் ஜோஷி அது சென்ற ஆண்டுக்கான பட்ஜெட் உரை என்பதை அறிந்து, உடனே முதல்வரிடம் கூறினார். உடனே சுதாரித்துக்கொண்ட முதல்வர், தனது பட்ஜெட் உரையை நிறுத்திக்கொண்டதோடு, அதற்காக அவையில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

உடனே, பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த அவர்கள் பெரும் கூச்சலிட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டினர். சட்டசபை சபாநயகர் அவர்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தனர். முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான வசுந்தர ராஜே, முதல்வர் அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், "நான் முதல்வராக இருந்தபோது பட்ஜெட்டை வாசிப்பதற்கு முன்பு முழுமையாக ஒருமுறை சரிபார்த்துக்கொள்வேன். கடந்த வருட பழைய பட்ஜெட்டை மீண்டும் வாசிக்கும் முதல்வரின் கையில் இருக்கும் மாநிலம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் அசோக் கெலாட், “உங்கள் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்ஜெட் நகலுக்கும் நான் வாசித்த பட்ஜெட் உரைக்கும் வேறுபாடு இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்து சில பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டன" என்றார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சட்டப்பேரவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com