டெல்லிக்கு விரையும் முதல்வர், குஜராத்தில் முகாமிட்டுள்ள இரட்டைத் தலைமை!

டெல்லிக்கு விரையும் முதல்வர், குஜராத்தில் முகாமிட்டுள்ள இரட்டைத் தலைமை!

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி நேற்று மறைந்த செய்தி வெளியானதும், நாடு முழுவதும் அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹீராபென் மோடி அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசித்து வந்த ஹீராபென் மோடி கடந்த ஜூன் மாதம் தன்னுடைய 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவரை சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார். பின்னர் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்தபோது பிரதமரும் அடிக்கடி குஜராத் சென்று வந்தார். பிரச்சாரங்களுக்கு இடையே தன்னுடைய தாயாரையும் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவின் காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஹீராபென் மோடி அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வின் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மறைந்தார். பிரதமர் மோடியின் தாயார் மறைவு செய்தி வெளியானதும் ஏராளமான தலைவர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், தினகரன், வை.கோ, அண்ணாமலை, இளையராஜா உள்ளிட்டவர்களும் டிவிட்டர் மூலம் இரங்கல் செய்தி தெரிவித்தார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் தயார் மறைவு குறித்து டிவிட்டர் மூலமாக இரங்கல் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முதல்வர் டெல்லிக்கு பயணம் செய்ய இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே தன்னுடைய தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க குஜராத் சென்ற மோடி, டெல்லிக்கு திரும்புவது தாமதமானதால் முதல்வர் ஸ்டாலினின் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அதன் படி இன்று காலை டெல்லி செல்லும் முதல்வர், பிரதமரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.

இந்நிலையில் மோடியின் தாயார் இறந்த செய்தி கேள்விபட்டதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விமானம் மூலம் நேற்றே குஜராத் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து மதுரையில் இருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர் செல்வமும் குஜராத் சென்றிருக்கிறார். இன்னும் பல அரசியல் தலைவர்கள் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com