‘நாட்டின் கொள்கை, அதானியின் கொள்கையாக மாறிவிட்டது’: ராகுல்காந்தி விமர்சனம்!

‘நாட்டின் கொள்கை, அதானியின் கொள்கையாக மாறிவிட்டது’: ராகுல்காந்தி விமர்சனம்!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக முடக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று தொடங்கியதும் இதில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல்காந்தி, ‘‘இந்திய ஒற்றுமை நடைபயணத்தின்போது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரின் குரல்களைக் கேட்டோம். அவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் பிரதமரின் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பலருக்கும் பணம் கிடைக்கவில்லை என்றே கூறுகின்றனர். இளைஞர்கள் பலரும் வேலையில்லாமல் இருப்பதாகச் சொல்கின்றனர். மேலும், பழங்குடியினரின் நிலங்களும் பறிக்கப்படுகின்றன.

அக்னிபாத் திட்டம், ராணுவத்தின் மீது திணிக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். அதோடு, இந்தத் திட்டத்தில் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு மீண்டும் அவர்கள் திரும்பவும் இந்த சமூகத்துக்கே அனுப்பி வைக்கப்படுவதால், இது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி, இந்த அக்னிபாத் திட்டம் ராணுவத்தால் கொண்டுவரப்பட்டதல்ல, ஆர்எஸ்எஸ் உள்துறை அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டது என்றும் அந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் கூறுகின்றனர்.

குடியரசுத் தலைவரின் உரையில் வேலையின்மை, பண வீக்கம் போன்ற எந்த வார்த்தைகளும் இல்லை. தமிழ்நாடு தொடங்கி, இமாச்சலப் பிரதேசம் வரை ‘அதானி’ என்ற ஒரு பெயரே கேட்கிறது. அதானி இப்போது எட்டு முதல் பத்து துறைகளில் கால் பதித்துள்ளார். ‘2014 முதல் 2022ம் ஆண்டு வரை அவரது சொத்து மதிப்பு சுமார் 800 கோடி ரூபாயிலிருந்து 14 ஆயிரம் கோடி ரூபாய்க்குச் சென்றது எப்படி?’ என்று இளைஞர்கள் கேட்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அதானியுடனான நட்பு அவருக்குத் தொடங்கியது. அதன் பின் 2014ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதானிக்கு ஆறு விமான நிலையங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு இந்தியாவிலேயே அதிக லாபம் ஈட்டும் மும்பை விமான நிலையமும் அவருக்கே வழங்கப்பட்டது. முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய வளர்ச்சி தொடர்பான பணிகளில் ஈடுபட கூடாது என்பது விதி. ஆனால், இந்த விதியை இந்திய அரசு மீறிவிட்டது.

என்ன மாயமோ மந்திரமோ, பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றார்; எஸ்பிஐ வங்கி அதானிக்கு நூறு கோடி ரூபாயை கடனாக வழங்கியது. பிரதமர் வங்கதேசம் சென்றார்; அந்த நாட்டு மின்துறை வளர்ச்சி வாரியம் மற்றும் அதானிக்கு இடையே 25 ஆண்டுகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. காற்றாலை மின்சாரத் திட்டத்தை அதானிக்கு வழங்க இந்திய பிரதமர் அலுவலகத்தில் இருந்து 2022ம் ஆண்டில் அழுத்தம் கொடுத்ததாக, இலங்கை அதிபர் ராஜபக்சே தன்னிடம் கூறியதாக இலங்கை மின்சார வாரியத் தலைவர் தெரிவித்தார். இவை அனைத்தும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அல்ல; அதானியின் வணிகத்துக்கான கொள்கை” என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டி பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com