மனைவி உடலை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வைத்திருந்த கொடூரன்!
சத்தீஸ்கர் மாநிலம், உஸ்லாபூரை சேர்ந்தவன் பவன் சிங் தாக்கூர். இவன் தனது வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட பிரிண்டர் போன்ற கருவிகள் சிக்கின. இந்த சோதனையின்போது அந்த வீட்டுக்கு அருகில் பாத்ரூமில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு சோதனை செய்தபோது, அந்த வீட்டுத் தண்ணீர் தொட்டியில் ஒரு பெண்ணின் உடல் வெட்டப்பட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பவன் சிங் தாக்கூரிடம் விசாரித்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ‘அது தனது மனைவியின் உடல் பாகங்கள்தான்’ எனக் கூறி திகிலூட்டினான் பவன் சிங். இதனையடுத்து அவனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது, மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பவன் சிங், சதி சாகூ என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துள்ளான். அந்தப் பெண்ணின் வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இவர்களுடன் யாரும் பேசுவதுமில்லை. பவன் சிங்-சதி சாகூ இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பவனுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, பவன் சிங் கள்ள ரூபாய் நோட்டு அச்சடிப்பது குறித்து மனைவி சதி சாகூ அடிக்கடி அவனோடு தகராறு செய்துள்ளார். இதனால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த பவன், குழந்தைகள் இருவரையும் தனது அம்மா வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துள்ளான். அதன் பின்னர் தனது மனைவியை கழுத்து நெறித்துக் கொலை செய்துள்ளான். பின்னர் தனது மனைவியின் உடலை எரித்துவிட முடிவு செய்த அவன், உடலை வெளியே கொண்டு போய் எரித்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து, அந்த உடலை துண்டு துண்டுகளாக வெட்டி மறைத்து வைக்க முடிவு செய்துள்ளான்.
இதனையடுத்து ஒரு கட்டிங் மெஷினை வாங்கி வந்து மனைவியின் உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி தான் புதிதாக வாங்கி வந்த தண்ணீர் தொட்டியில் அந்த உடலை மறைத்து வைத்துள்ளான். குடும்பத்தினர் யாரும் பேசுவதில்லை என்பதால் அந்தப் பெண் குறித்து யாருக்கும் தகவல் தெரியவில்லை. குழந்தைகளும் இல்லை என்பதால் பக்கத்து வீட்டினருக்கும் சந்தேகம் வரவில்லை. இதில் இன்னும் கொடுமையான விஷயம், சதியை கொலை செய்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது என்பதுதான். இப்போதுதான் இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் வெளியுலகத்துக்குத் தெரிய வந்துள்ளது.