விசாரணைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை இடுவது கூடாது - மும்பை நீதிமன்றம் கண்டனம்!
விசாரணைக் கைதிகளை விசாரிப்பதில் காட்டப்படும் அலட்சியம் குறித்து மும்பை சிறைத்துறை அதிகாரிகளை நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறல் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்தியாவில் விசாரணைக்கைதிகளாக ஏறக்குறைய 1700 பேர் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்திய அளவில் உத்திரப் பிரதேசத்தில் அதிக அளவு விசாரணைக்கைதிகள் இருப்பதாகவும், தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் விசாரணைக் கைதிகள் அதிகளவில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்கைதிகளை மோசமாக நடத்துவதிலும் தமிழ்நாடு தேசிய அளவில் செய்திகளில் அடிபடுகிறது. விதவிதமான விசாரணைகள், தண்டனைகள் என தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்கள் சித்திரவதைக் கூடங்களாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே கவலை தெரிவித்து வருகிறார்கள்.
சாத்தான் குளத்தில் தந்தையும் மகனும் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டது முதல் சமீபத்தில் கல்லிடைக்குறிச்சியில் பலரது பல்லை பிடுங்கிய சம்பவம் வரை விசாரணைக் கைதிகளை தவறாக நடத்துவது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் இது குறித்து புகார்கள் பதிவு செய்திருந்தாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லையென்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் மும்பை நீதிமன்றத்திலிருந்து ஆறுதலான செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது தனிநபர் உரிமை மீறலாகும் என நீதிமன்றம் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக உள்ள அகமது கமால் ஷேக், தன் மீது நடத்தப்படும் விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார்.
விசாரணை கைதியான கமால் ஷேக்கை, நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று திரும்பும்போது சோதனை என்னும் பெயரில் நிர்வாணப்படுத்தி சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். பிற கைதிகள் மற்றும் காவல்துறை ஊழியர்கள் முன்னிலையில் இத்தகைய சோதனையில் நடப்பதால் மன ரீதியாக தான் பாதிக்கப்பட்டிருப்பதாக மனுவில் தெரிவித்திருந்தார்.
பிறர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி சோதனைகளை மேற்கொள்வது தனிநபர் உரிமையை மீறுவது என்றும் அவமதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்றும் அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தார். கமால் ஷேக் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மும்பை சிறை அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். மனுதாரர் குறிப்பிட்டபடி எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் குறிப்பிட்ட விஷயங்களை மேற்கோள் காட்டியவர், இது போன்று இன்னும் சில விசாரணைக் கைதிகளும் புகார் தெரிவித்திருப்பதால் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது என்றார்.
விசாரணை கைதிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்வது சம்பந்தப்பட்டவர்களை அவமதிக்கக்கூடிய செயல்.
கைதிகளில் ஆபாச வார்த்தைகள் அல்லது தகாத வார்த்தைகளை பேசி அவமானப்படுததுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இனி ஸ்கேனர், தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி மட்டுமே சோதனையிட வேண்டும் என்று மும்பை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருவேளை போதுமான தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லையென்றால் விசாரணைக் கைதிகளை தனிமைப்படுத்தி சோதனை செய்யவேண்டும். மற்றவர்கள் முன்னிலையில் செய்யக்கூடாது என்றும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இனியாவது விசாரணைக் கைதிகளை சக மனிதனாக நடத்தப்படும் நிலை வரவேண்டும்.