வீலிங் செய்ய முயன்று தலை குப்புறக் கவிழ்ந்த கேரள இளைஞர்! ஓட்டுநர் உரிமம் ரத்து!
கேரளாவில் இளைஞர் ஒருவர் தொடர்ந்து பைக் சாகஸத்தில் ஈடுபட்டதில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஒருவர் மட்டுமே இது போன்ற குற்றத்திற்காக ஒரே வருடத்தில் 7 முறை அபராதம் கட்டியிருப்பது அதிர்ச்சிகரமான தகவல்.
சாலையில் நடந்து செல்வோரின் நடமாட்டத்தைப் பாதிக்கும் வகையிலும், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரை அச்சுறுத்தும் வகையிலும் பைக் ரேஸில் ஈடுபடுவது, பைக்கில் வீலிங் செய்து காட்டுவது போன்றவை நாடு முழுவதும் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுவதுடன் அவர்கள் கைதாகி சிறை செல்லும் அபாயமும் உண்டு.
ஆனாலும், மயிர்க்கூச்செரிய வைக்கும் சாகஸச் செயல்களில் ஈடுபடுவதாக நினைத்துக் கொண்டு சில இளைஞர்கள் அரசின், காவல் துறையின் எச்சரிக்கையையும், கடுமையான அபாரத முறை, மற்றும் தண்டனையைக் கூட அலட்சியப்படுத்தி இவற்றில் ஈடுபடுகின்றனர்.
அவர்களது இலக்கு பைக் ரேஸில் கிடைக்கும் பந்தயத் தொகையாகவும் இருக்கலாம் அல்லது சில நேரங்களில் சாலையில் செல்வோர் குறிப்பாக இளம்பெண்களின் கவனத்தைக் கவர்வதாக மட்டுமே கூட இருந்து விடுகிறது. இதனால் அப்படி சாகஸத்தில் ஈடுபடுவோருக்கு மட்டுமல்ல சும்மா சாலையில் நடந்து செல்வோரின் உயிருக்கு கூட ஆபத்து வந்து விடுகிறது.
வெகு சமீபத்தில் கேரளாவின் வெஞ்சரமூடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், தனது சாகஸத்தை காணொலியாக்கி இணையத்தில் பதிவிட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைக்கவே கேரள போலீஸார் சந்தேகத்திற்கிடமான அப்பகுதி சி சி டி வி காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
நேற்று அதே இளைஞர் சாலையில் செல்லும் போது அருகில் கல்லூரி மாணவிகள் சிலர் நடந்து சென்றிருக்கின்றனர். அப்போது திடீரென இந்த இளைஞர் தனது பைக்கில் வீலிங் செய்ய முயன்றிருக்கிறார். அப்போத் பைக் நிலைதடுமாறி சாலை நடுவே தரையில் விழுந்திருக்கிறார். விழுந்த வேகத்தில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரும் கீழே விழ நேர்ந்து அவர் கடுமையான காயங்களுடன் அப்பகுதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞரின் பைக் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதோடு அவரது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இளைஞர் 4 நாட்களுக்கு முன்பு தான் இதே போன்றதொரு குற்றத்திற்காக அபராதம் செலுத்தி பைக்கை மீட்டார் என்பது கூடுதல் செய்தி/