55 பயணிகளை தவிக்கவிட்டுக் கிளம்பிச் சென்ற விமானம்!! உள்நாட்டு பயணமா? உஷாரா இருங்க!

'கோ பர்ஸ்ட்' விமானம்
'கோ பர்ஸ்ட்' விமானம்

மதுபோதையில் சக பெண் பயணி மீது விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவமும் ஏர் இந்தியா விமான நிறுவனம் கொடுத்த தண்டனையும் சென்ற சில தினங்களில் பேசு பொருளாக இருந்தது. பாதிக்கப்பட்ட பயணி எழுதிய புகாரின் அடிப்படையில், அடுத்த 30 நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

ஏர் இந்தியா அளித்த வித்தியாசமான தண்டனை பற்றிய செய்திகள் இணையத்தில் கேலிக்குள்ளானது. சம்பந்தப்பட்ட ஆசாமி பணிபுரிந்த அமெரிக்க நிறுவனமோ அவரை வேலையில் இருந்து நீக்கியிருப்பது இணையவாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கொரோனா தொற்று பரவலுக்குப் பின்னரே இந்திய விமான நிறுவனங்கள் தடுமாற்றத்தில் இருக்கின்றன. பயணிகள் வரத்து குறைந்திருக்கிறது. அதனால் டிக்கெட் விலையும் அதிகரித்திருக்கிறது. இவற்றையெல்லாம் விட இந்திய விமானங்களின் கவனக்குறைவும், அலட்சியமுமே பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில் பெங்களூரில் நேற்று நடந்த சம்பவமும் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 6.40 மணிக்கு டெல்லிக்கு 'கோ பர்ஸ்ட்' என்னும் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் புறப்பட்டது. ஆனால், வரவேண்டிய 55 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமலே கிளம்பிவிட்டது.

ஒரிரு பயணிகளை தவறவிட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஏறக்குறைய பாதி பயணிகளை தவற விட்டுவிட்டு விமானம் ஏன் கிளம்பிச் சென்றது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இது குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது.

கவனக்குறைவினால் பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் விமானம் கிளம்பிவிட்டதாக விளக்கம் தந்த, 'கோ பர்ஸ்ட்' நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. 55 பயணிகள் வராததை கவனிக்காமல் இருந்த காரணத்தால் சம்பந்தப்பட்ட விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கும் நஷ்ட ஈடு தருவதாகவும் விமான நிறுவனம் அறிவித்திருக்கிறது. பெங்களூரு - டெல்லி விமானத்தை தவற விட்ட 55 பயணிகளுக்கு தலா ஒரு டிக்கெட்டை இலவசமாக வழங்குகிறது. நடப்பாண்டுக்குள் தங்களுடைய விமானங்களில் பயணம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். மிஸ் பண்ணிடாமல் ஏற்றிக்கொண்டால் சரி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com