யுகேஜி படிக்கும் குழந்தையை ஃபெயிலாக்கிய பள்ளி!

யுகேஜி படிக்கும் குழந்தையை ஃபெயிலாக்கிய பள்ளி!

பெங்களூருவில் அனேகலில் இயங்குகிறது ஒரு தனியார் பள்ளி. இந்தப் பள்ளியில் யுகேஜி படிக்கும் ஆறே வயது நிரம்பிய குழந்தை ஒன்றை இந்த வருடம் ஃபெயிலானதாக அந்தப் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த வருடம் அந்தக் குழந்தை ஃபெயிலானதால் அடுத்த ஆண்டும் மீண்டும் யுகேஜியே படிக்க வேண்டிய நிலைக்கு அந்தக் குழந்தை தள்ளப்பட்டிருக்கிறது.

இது குறித்து அந்தக் குழந்தையின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமும் தலைமையிடமும் முறையிட்டுக் கேட்டுப்பார்த்தும் எந்த மாற்றமும் நடக்கவில்லை. மாறாக, ‘உங்கள் ஒரு குழந்தைக்காக எங்களின் பள்ளி நடைமுறையை நாங்கள் மாற்றிக்கொள்ள முடியாது. குழந்தையை ஃபெயிலாக்குவதன் மூலம், எதிர்காலத்தில் அது கல்வியை உரிய முறையில் ஆர்வம் செலுத்தி படிக்க வழி செய்யும்’ என்றும் பள்ளி நிர்வாகம் குழந்தையின் தந்தை மனோஜ் பாதலிடம் கூறியிருக்கிறது.

ஆனால், தங்கள் குழந்தை இந்த வருடம் ஃபெயிலாவதன் மூலம் அது மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாகும். அதோடு, அந்தக் குழந்தையால் இந்தச் சிக்கலை புரிந்துகொள்ளவே முடியாது. மேலும் தங்கள் குழந்தை அதன் வாழ்வில் ஒரு வருடம் பின்தங்கி விடும் என்றும் அக்குழந்தையின் தந்தை கவலை தெரிவித்துள்ளார்.

இந்த யுகேஜி குழந்தை ஃபெயில் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது. அதைத் தொடர்ந்து முன்னாள் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஃபெயிலான யுகேஜி குழந்தை 160 மதிப்பெண்ணுக்கு 100 மதிப்பெண் எடுத்திருப்பதாலேயே ஃபெயிலாக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் எழுதிக்கொடுத்த தாளையும் தனது பதிவில் இணைத்துள்ளார். இந்தத் தகவல் பெரிதாகப் பரவிய நிலையில், மாநில கல்வித்துறை சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, யுகேஜி மாணவி ஃபெயிலுக்கான விளக்கத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com