மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 30 வயதுடைய பெண் ஒருவர் தனது நான்கு குழந்தைகளை கிணற்றில் தள்ளி விட்டுத் தானும் கிணற்றில் குதித்துள்ளார்.
எனினும், தண்ணீரில் விழுந்த பெண் உயிருக்கு பயந்து தனது மூத்த மகளுடன் பாதுகாப்பாக மேலே ஏறுவதற்காக கிணற்றில் தொங்கிய கயிற்றை பிடித்துக் கொண்டுள்ளார். இதனால் அவரும், மூத்த மகளும் உயிர் பிழைத்து விட மீதமுள்ள நபர்கள் அனைவரும் கிணற்றுக்குள் மூழ்கி இறந்து விட்டதாகத் தகவல். இறந்தவர்களில் 18 மாத மகன் உட்பட மூன்று குழந்தைகள் இருந்தனர், அவர்கள் முறையே மூன்று மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
புர்ஹான்பூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்டி கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் குமார் தெரிவித்தார்.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிரமிளா பிலாலா என்ற பெண், தனது கணவர் ரமேஷுடன் சண்டையிட்ட பிறகு இப்படியொரு கொடூரமான நடவடிக்கையில் இறங்கியதாக அவர் கூறினார்.
பிரமிளாவின் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து 3 உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்பி தெரிவித்தார்.
கிணற்றிலிருந்து தப்பிய பிரமிளா மற்றும் அவரது 7 வயது மகளின் உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரமிளா உயிருடன் மீண்டு விட்டாலும் கூட தன் கையாலேயே தனது குழந்தைகளைக் கிணற்றுக்குள் தள்ளிக் கொன்ற சம்பவத்தை அவரால் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. இந்தச் சமூகமும் அவரைச் சும்மா விடப்போவதில்லை. சட்டமும் நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும்.
இந்நிலையில் அவரும் அவரது 7 வயதுப் பெண் குழந்தையும் இன்னமும் சிக்கலில் தான் இருக்கின்றனர்.
கணவருடன் சண்டை போன்ற குடும்பத் தகராறு காரணமாக சொந்தக் குழந்தைகளை கிணற்றில் வீசித் தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண் இறுதிக் கட்டத்தில் முடிவை மாற்றி உயிர் தப்பி விட்டார். ஆனால், இத்தனைக்கும் காரணமான கணவருக்கு இந்த விஷயத்தில் நேரடித் தொடர்பு இல்லை. சட்டப்படி குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிய குற்றத்திற்காக பிரமிளா தான் தண்டிக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது.
இதைத்தான் நெருப்புக்கு பயந்து எண்ணெய்ச்சட்டிக்குள் பாய்ந்த கதை என்பார்களோ!
இந்த நாட்டில் மாநில பேதமின்றி இப்போதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமே இல்லை. பொருளாதார சுதந்திரம் இருந்து தன் குழந்தைகளைத் தன் காலில் நின்று தானே வளர்த்தெடுக்கும் திறன் இருந்திருந்தால் ஒருவேளை பிரமிளா இப்படி ஒரு முடிவெடுத்திருக்க மாட்டாரோ என்னவோ?
இன்னமும் இங்கு நவீன நல்ல தங்காள்கள் உருவாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.