தெய்வம் நின்று கொல்லும்... கோயிலை மறைத்துக் கட்டிய வணிக வளாகம்! எங்கே?

தெய்வம் நின்று கொல்லும்... கோயிலை மறைத்துக் கட்டிய வணிக வளாகம்! எங்கே?

ஒதிஷா மாநிலம் பூரியில் சந்தை வளாகமொன்றில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கவென்று உள்ளே நுழைந்த போது அங்கு நிகழ்த்தப்பட்டிருந்த கோவில் நில அபகரிப்பு விவகாரம் அம்பலமானது.

செவ்வாய்க்கிழமை, தாசில்தார் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு நில அபகரிப்பு தொடர்பான தங்களது அறிக்கையை பூரி சப்-கலெக்டரிடம் சமர்ப்பித்தது.

பூரி, லக்ஷ்மி மார்க்கெட் வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தின் மூலமாக, புனித நகரமான பூரியில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோவில் நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றியதில் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

முன்னதாக ஸ்ரீமந்திர் நிலத்தின் ஆக்கிரமிப்பு குறித்து கோபத்தில் இருந்த ஒதிஷா மக்களை இந்த சம்பவமானது எரிகிற தீயில் மேலும் எண்ணெய் வார்ததைப் போலாக்கி விட்டது, ஏனெனில், மீட்புப் பணிகளுக்காக சந்தை வளாகத்தின் உள்ளே நுழைந்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தீ விபத்து நிகழ்ந்த சந்தை வளாகத்திற்குப் பின்னால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழமையான சிவன் கோயில் தான் அதிர்ச்சிக்கு காரணம். தீ விபத்து நடக்கும் வரை அங்கு அப்படி ஒரு பழமையான கோவில் இருப்பது பொதுமக்களுக்குப் புலனாகவே இல்லை என்கிறார்கள்.

புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர் டாக்டர் சுரேந்திர மிஸ்ரா கூறுகையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் அந்த கோவிலானது கர்ணமேஸ்வர் சிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது, இது 11 ஆம் நூற்றாண்டில் ஆன்மீக துறவி கர்ணமகிரியால் நிறுவப்பட்டது. அப்போதைய பூரி மன்னன் கோவிலை நிறுவிய துறவிக்கே அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்தான். "முன்பு, இந்த ஆலயத்திற்கு பல யாத்ரீகர்கள் வருகை தந்தனர். கோவில் அமைந்துள்ள நிலம் எப்படி கை மாறி சந்தை வளாகமாக மாறியது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்,''என்றார்.

மூத்த வழக்கறிஞர் ரமேஷ் பிரசாத் சின்ஹா, அரசுப் பதிவேடுகளின்படி, கர்ணமேஸ்வர் சிவன் கோயிலின் 10,000 சதுர அடி நிலம் (22 டெசிமல்), ஸ்ரீ ஜெகநாதர் கோயில் நிர்வாகக் குழுவுக்குச் சாதகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 1250 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பக்கத்து மனையானது அச்யுதானந்த் மொகந்தி என்பவருக்குச் சொந்தமானது. இதில் கோவில் நிலத்தில் சந்தை வளாகம் எப்படி வந்தது என்பதை நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்

சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, ஆர்டிஐ ஆர்வலர் ஜெயந்த் குமார் தாஸ் நில பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசை அணுகினார். SJTA உடனடியாக சொத்தை கையகப்படுத்த வேண்டும் என்றும் தாஸ் கூறினார்.

கோவில் நிலத்தில் மார்க்கெட் வளாகம் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்த பூரி கோனார்க் மேம்பாட்டு ஆணையத்தின் அப்போதைய செயலாளர், தாசில்தார், தீயணைப்பு அலுவலர் ஆகியோர் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

சிவன் கோவிலின் பராமரிப்பு பணியானது முதலில் ஒரு வைஷ்ணவ மடத்திடம் ஒப்படைக்கப்பட்டது, பின்னர் மடம் அந்த சொத்தை ஒரு தனி நபருக்கு விற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த தனி நபரே கோவில் குறித்த அருமையும், மரபும் புரியாமல் கோவிலுக்கு செல்லும் பாதையை அடைத்து சந்தை வளாகத்தை கட்டியுள்ளார். அத்துடன் தற்போது அந்த கோவிலில் உள்ள சக்தி மற்றும் லிங்கம் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கோவில் நிலத்தில் மார்க்கெட் வளாகம் எப்படி வந்தது என்பதை கண்டறியுமாறு பூரி தாசில்தாரிடம் எஸ்.ஜே.டி.ஏ உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல். இதுகுறித்து தஹசில்தார் க்ஷிரோத் குமார் பெஹரா கூறுகையில், சந்தை வளாக உரிமையாளருக்கு தனது நிலைப்பாட்டை விளக்கி, இது தொடர்பாக ஆவணங்களை சர்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்படும் - என்றார்.

செவ்வாய்க்கிழமை, தாசில்தார் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு தனது அறிக்கையை பூரி சப்-கலெக்டரிடம் சமர்ப்பித்தது. தீ விபத்திற்குப் பிறகு, தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், வளாகத்தில் இருந்து செயல்படும் வணிகர்களின் சொத்து சேதத்தை மதிப்பிடவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பூரி சப்-கலெக்டர் பாபதரன் சாஹு கூறுகையில், “தீ விபத்தில் மோசமாக சேதமடைந்த வளாகத்தின் உறுதித்தன்மையை மதிப்பீடு செய்ய பொதுப்பணித் துறையிடம் (PWD) கேட்டுள்ளோம். எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் நாங்கள் அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றுவோம்.

- என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com