கேரளப் பள்ளிகளில் இனி 'சார்'-'மேடம்' கிடையாது, எல்லோரும் 'டீச்சர்' தான்!

கேரளப் பள்ளிகளில் இனி 'சார்'-'மேடம்' கிடையாது, எல்லோரும் 'டீச்சர்' தான்!

கேரளப் பள்ளிகளில் ஆசிரியர்களை ‘சார்’ என்றும் ஆசிரியைகளை ‘மேடம்’ என்றும் இனி அழைக்கத் தேவையில்லை. அனைவரையும் ‘டீச்சர்’ என்று பாலின சார்பற்று அழைக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது.

கல்வி பயிற்றுவிப்பவர்களை பாலின அடிப்படையில் சார், மேடம் என்று அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கோரி ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதை விசாரித்த ஆணையம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆணையத்தின் தலைவர் கே.வி.மனோஜ் குமார், உறுப்பினர் சி.விஜயகுமார் அடங்கிய குழு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இதன் நிமித்தமான வழிகாட்டுதலை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு வலியுறுத்தியுள்ளது. டீச்சர் என்று அழைப்பதால் சமத்துவம் பேணப்படுவதோடு மாணவர்கள் மத்தியில் தங்கள் ஆசிரியர்களுடனான பிணைப்பை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2021-ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மாத்தூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார், மேடம் போன்ற மரியாதை நிமித்தத்துக்குப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு தடை விதித்தது.

நாட்டிலேயே முதல்முறையாக அந்த கிராம பஞ்சாயத்து இந்த திட்டத்தை அமல்படுத்தியது. சார், மேடம் வார்த்தைகளுக்கு பதிலாக பெயர் சொல்லியோ, அவர்களின் பதவியைச் சொல்லியோ அழைக்கலாம். சேட்டன், சேச்சி என்று கூட அழைக்கலாம். சார், மேடம் போன்ற வார்த்தைகள் அரசு அலுவல் கடிதங்களிலும் இடம் பெறக் கூடாது என முடிவெடுத்தது.

கடந்த ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர்களிடம் ஆசிரியர்களை இனி சார் மேடம் என்று அழைக்கக் கூடாது. இரு பாலின ஆசிரியர்களையும் `டீச்சர்' என்றே அழைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாத்தூர் பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளை மக்கள் சார் மேடம் என்று அழைக்க வேண்டிய அவசியமில்லை; அவர்களின் பதவியை சொல்லி அழைத்தால் போதும் என்று கூறியதை அடுத்தே இந்தப் பள்ளியும் அதனை பின்பற்றத் தொடங்கியது. உள்ளாட்சி அமைப்புகளில் கொண்டுவரப்பட்ட அந்த சீர்திருத்தம் தற்போது அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com