3 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறார்கள் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தாருங்கள் - வெளியுறவு அமைச்சருக்கு மெஹபூபா முப்தி வேண்டுகோள்!

3 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறார்கள் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தாருங்கள் - வெளியுறவு அமைச்சருக்கு மெஹபூபா முப்தி வேண்டுகோள்!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படாததால் வெளிநாடு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான மெஹபூபா முப்தி, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது அந்த மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மெஹபூபா முப்தியும் சுமார் 14 மாதங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மெஹபூபா முப்தி ஒரு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், தனது பாஸ்போர்ட் கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை என்றும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நானும் எனது தாயாரும் கடந்த 2020 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக விண்ணப்பித்து இருந்தோம். ஆனால், எனக்கும் எனது தாயாருக்கும் பாஸ்போர்ட் வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கு ஊறு விளைவிப்பதாக அமையும் என்று எதிர்மறையான அறிக்கையை ஜம்மு காஷ்மீர் சிஐடி வழங்கியுள்ளது.

தேச பாதுகாப்பு என்ற காரணத்தை காட்டி ஜம்மு காஷ்மீரில் பத்திரிகையாளர்கள், மாணவர்கள் என பலரது பாஸ்போர்ட் விண்ணப்பங்களும் தன்னிச்சையான போக்குடன் நிராகரிக்கப்படுகின்றன. எனது தாயாரை புனித பயணமாக மெக்காவிற்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இதற்காக நான் காத்திருக்கிறேன். அற்பத்தனமான அரசியல் காரணங்களால் எனது தாயாரின் ஒரு சிறிய விருப்பத்தைக் கூட என்னால் நிறைவேற்ற முடியாமல் இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.

அதேபோல், "எனது மகள் இல்டிஜா மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் புதுப்பிக்கக் கோரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பமும் இன்னும் பரிசீலிக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்தும் ஆவன செய்ய வேண்டும் என்றும் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் மெஹபூபா முப்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com