இது சர்வதேச மகளிர் தின ஸ்பெஷல்... மகள்களுக்காக மறுமணம் செய்துகொள்ளும் கேரள முஸ்லிம் தம்பதியினர்! ஏன் தெரியுமா?

இது சர்வதேச மகளிர் தின ஸ்பெஷல்... மகள்களுக்காக மறுமணம் செய்துகொள்ளும் கேரள முஸ்லிம் தம்பதியினர்! ஏன் தெரியுமா?

இதைவிட பொருத்தமான தேதியை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. கேரள மாநிலம், கணங்காட்டைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான சி சுக்கூர் மற்றும் அவரது மனைவி டாக்டர் ஷீனா, இவர் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக இருந்தவர். இத்தம்பதியினர் வரும் மார்ச் 8-ம் தேதி - சர்வதேச மகளிர் தினத்தன்று மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். தம்பதி எனும் போது மீண்டும் ஒருமுறை திருமணம் எதற்கு என்கிறீர்களா? அதை அவர்களிடமே கேட்டதற்கு- தங்கள் மகள்கள் தங்கள் முழு சொத்தையும் பெறுவதை உறுதிசெய்வதற்காகத் தான் இப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகக் கூறுகிறார்கள் இவர்கள்.

முதல்முறை ஷரியா சட்டத்தின் கீழ் அக்டோபர் 6, 1994 இல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், இப்போது சிறப்புத் திருமணச் சட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். "எங்கள் மூன்று பெண் குழந்தைகளும் எங்கள் சொத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்” என்கிறார் வழக்கறிஞர் ஷுக்கூர்.

நாட்டில் நிலவும் முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்படி, தந்தையின் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே மகள்களுக்கு கிடைக்கும், மீதமுள்ளவை அவரது சகோதரர்களுக்குச் செல்லும். ஆகவே தான் அந்த சட்ட திட்டங்களில் இருந்து விலக்கு பெற நாங்கள் இம்மாதிரியாக முடிவெடுத்தோம் என்கிறார் ஷுக்கூர். இவர் 2022 ல் வெளிவந்த ‘ன்னா தான் கேஸ் கொடு’ (என் மீது வழக்குப் போடுங்கள்) எனும் மலையாளப் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசுகையில் “தாசில்தார் வழங்கிய வாரிசுச் சான்றிதழில் எனது சகோதரர்கள் வாரிசுகளாக உள்ளனர். எங்களுக்கு ஆண் சந்ததி இல்லாததால் இப்படி ஆயிற்று. இது அப்பட்டமான பெண்களின் உரிமை மீறல் மற்றும் வெட்கக்கேடான பாகுபாடு,’’ என்று நாங்கள் கருதுகிறோம். ‘சமத்துவ உரிமை ஒரு முஸ்லிமின் மகள்களுக்கு மறுக்கப்படுவது வருத்தமளிக்கிறது’

“அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவின்படி, மதம், சாதி அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஆனால், நடைமுறை என்று வரும் போது இஸ்லாத்தில் இருக்கும் ஒரு முஸ்லிமின் மகள்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்கது,” என்று ஷுக்கூர் கூறினார்.

"நான் இரண்டு முறை விபத்துகளைச் சந்தித்திருக்கிறேன், அந்த விபத்துகளில் இருந்து என்னால் தப்பிக்க முடிந்தது. ஆனால், அவை என்னை யோசிக்க வைத்துவிட்டன. நான் உலகை விட்டுப் பிரிந்த பிறகு என்ன நடக்கும் என்று அந்த விபத்து தந்த அனுபவங்கள் என்னைச் சிந்திக்க வைத்து விட்டன. ஆகவே, எனது சொத்துக்களுக்கு எனது பெண் குழந்தைகள் மட்டுமே வாரிசுகளாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்,'' என்கிறார் ஷூக்கூர்.

டி எச் முல்லா எழுதிய முஹம்மது சட்டத்தின் கோட்பாடுகளின்படி, முஸ்லீம் வாரிசுரிமை குறித்த நீதிமன்ற உத்தரவுகளின்படி, பெண் குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு கிடைக்கும், மீதமுள்ள பகுதியை அவரது சகோதரர்கள் பெறுவார்கள் என்று ஷுக்கூர் கூறுகிறார். எனவே இதில் இருந்து தப்புவதற்கு 1954 இல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டத்தைத் தேர்ந்தெடுப்பதே முஸ்லிம்களுக்கு ஒரே தீர்வு என்று அவர் நம்புகிறார்.

1994-ம் ஆண்டு செருவத்தூரில் உள்ள நசீமா மன்சிலில் மறைந்த பனக்காடு சையத் ஹைதர் அலி ஷிஹாப் தங்கல் அவர்களின் முன்னிலையில் எங்கள் திருமணம் நடைபெற்றது. இப்போது மீண்டும் வரும் மார்ச் 8-ம் தேதி ஹோஸ்துர்க் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மீண்டும் எங்களது திருமணத்தை நானும், என் மனைவியு நடத்தவுள்ளோம். சிறப்பு திருமணச் சட்டமானது, அச்சட்டத்தின் கீழ் உறுதிசெய்யப்பட்ட எந்தவொரு நபரின் சொத்துக்கும் வாரிசு என்பது இந்திய வாரிசுச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் என்று கூறுகிறது,” ஆகவே நாங்கள் இதைத் தேர்ந்தெடுத்தோம்

- என்கிறார் ஷூக்கூர்.

சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனில் 30 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு அளிக்க வேண்டியது அவசியம். அதன்படி கடந்த ஃபிப்ரவரி 3 ஆம் தேதியே எங்களது திருமணம் குறித்த நோட்டீஸ் அளித்திருந்தோம். இப்போது 30 நாட்கள் கெடு முடிந்து இதோ திருமண நாள் நெருங்கி விட்டது. “அல்லாஹ் மற்றும் நமது அரசியலமைப்பின் முன் அனைவரும் சமம். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சமத்துவம் பரவட்டும்,” என்கிறார் ஷூக்கூர்.

சர்வ தேச மகளிர் தினத்தில் முஸ்லீம் மகள்களுக்கு அவர்களது பெற்றோர் உறுதி செய்யவிருக்கும் சொத்துரிமை சார்ந்த இந்த சமத்துவம் உலகெங்கும் பரவட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com