காலம் மாறிப் போச்சு! கூடுதல் வரதட்சிணை கேட்டு கல்யாணத்தை நிறுத்திய மணமகளின் கதை!

காலம் மாறிப் போச்சு! கூடுதல் வரதட்சிணை கேட்டு கல்யாணத்தை நிறுத்திய மணமகளின் கதை!

இதுவரை நாம் கேள்விப்பட்ட வரதட்சிணை கதைகளில் எல்லாம் மணமகன் வீட்டார் தான் அதிக வரதட்சிணை கேட்டு கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்துவார்கள். இப்போது வரை நமது பொழுதுபோக்கு சேனல்களில் மெகா சீரியல்களின் டி ஆர் பி ரேட்டிங்கை எகிற வைக்கும் ஒரு யுக்தியாக இப்படி ஒரு காட்சியைத் தான் இயக்குநர்கள் கையாண்டு வருகிறார்கள்.அவர்களுக்கு இப்போது உல்டாவாக புதிய விஷயமொன்று கிடைத்திருக்கிறது.அது என்னவென்றால், இனிமேல் மணமகன்கள் மட்டுமல்ல, மணமகள்களும் கூட வரதட்சிணை கேட்டு கல்யாணத்தை நிறுத்தக் கூடும் என்பது தான்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த போச்சாரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அஸ்வரா பேட்டை பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு இரு வீட்டுப் பெரியவர்களின் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயிக்கப்பட்டபடி நேற்று முன்தினம் காலை மணமகன் வீட்டார் பத்ராத்ரி குடேம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். பழங்குடியின வழக்கப்படி தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மணமகன் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்தனர்.

முன்பே தீர்மானிக்கப்பட்டதன் பேரில் அழைப்பிதழில் தெரிவித்திருந்தபடி நேற்று முன்தினம் மாலை மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமண மண்டபத்திற்கு வந்தனர். திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்கு அங்கு சுற்று வட்டாரத்தில் இருந்த தனியார் ஹோட்டலில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மறுநாள் காலையில் திருமணம் என்ற நிலையில் நேற்று காலை மணமகன் திருமண உடையில் மணமேடைக்கு வந்தார். ஆனால் அதுவரையிலும் கூட மணமகள் வீட்டார் யாரும் திருமண மண்டபத்திற்கு வந்திருக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் மணமகள் வீட்டார் தங்கி இருந்த தனியார் ஹோட்டலுக்கு சென்று திருமண மண்டபத்திற்கு வருமாறு மணமகள் குடும்பத்தாருக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது, தன்னை அழைத்துச் செல்ல வந்தவர்களுடன் மண்டபத்திற்கு வர மணப்பெண் மறுத்தார். அத்துடன் கூடுதல் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே திருமண மண்டபத்திற்கு வர முடியும் என்றும் அவர் பிடிவாதமாகக் கூறவே, சம்பவம் மணமகன் வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மணமகளை அழைக்கச் சென்றவர்கள் மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பி வந்து மணமகளின் பிடிவாதமான கோரிக்கையை அங்கிருந்தவர்களுக்கு தெரியப்படுத்தினர். இரு வீட்டுக்குப் பொதுவான நபர்கள் சமாதான நடவடிக்கையில் இறங்கி மணமகளுக்கு புத்தி கூறி நிலமையை எடுத்துச் சொல்லி திருமணத்திற்கு சம்மதிக்கச் செய்ய முயற்சி மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்தது. அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார், இந்தப் பிரச்சனையை காவல்துறை கவனத்துக்கு கொண்டு சென்றனர். போலீஸார் வந்து மத்தியஸ்தம் செய்தும் கூட மணமகளின் பிடிவாதம் தளரவே இல்லை. அவர் மேலும் கூடுதலாக வரதட்சிணை கொடுத்தால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிக்க முடியும் எனப் பிடிவாதமாக இருந்தார். இதனால், இரு வீட்டுப் பெரியவர்களும் பேசி ஒரு முடிவெடுத்து இறுதியில் திருமணத்தை நிறுத்துவதாக முடிவெடுத்தனர்.

பதிலுக்கு மணமகன் வீட்டார், மணமகளுக்கென முன்பே அளித்திருந்த 2 லட்சம் ரூபாய் வரதட்சிணைத் தொகையானது மணமகன் வீட்டாரிடம் மீண்டும் திருப்பி அளிக்கப்பட்டது.

வரதட்சணை வாங்குவதும் சரி, கொடுப்பதும் சரி சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நாட்டில் இத்தகைய கூத்துக்களும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கின்றன.

இதில் காவல்துறையின் தலையீடு இருந்தும் கூட கைது நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com