திருப்பதி தரிசனம், நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை, அதிருப்தியில் பக்தர்கள்!

திருப்பதி
திருப்பதி

ஜனவரி 26 குடியரசு தினத்தைத் தொடர்ந்து லாங் வீக் எண்ட் என்றாலே திருப்பதியில் கூட்டம் குவிந்துவிடும். குறிப்பாக ஜனவரி மாத வார இறுதிகளில் எப்போதும் கூட்டமுண்டு. இம்முறை லாங்க வீக் எண்ட். இது தவிர கடந்த சனிக்கிழமையன்று ரத சப்தமி வேறு.

கடந்த 4 நாட்களாக திருப்பதியில் தரிசனம் செய்த பக்தர்களின் கூட்டம் 5 லட்சத்தை கடந்திருக்கிறது என்கிறார்கள். புத்தாண்டு, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் வரவு, ஒரு வாரமாக குறைந்து கொண்டே இருந்தது.

ஜனவரி 26 குடியரசு தினமும், அதைத் தொடர்ந்து திருப்பதியில் பிரம்மோற்சவமும் நடந்ததால் பக்தர்கள் வரத்து அதிகமாகிவிட்டது. ஏழு வாகனங்களில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தார்கள். இதனால் 30 மணி நேரத்திற்கும் அதிகமாக தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், சமீபமாக ஒரு நாளுக்கு மேல் இரவு, பகலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது. 300 ரூபாய் கட்டணம் செலுத்தி விரைவு தரிசனம் பதிவு செய்தாலும் தாமதமாகிறது.

திருப்பதி தேவஸ்தானம், கடந்த ஆண்டு இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் முறையை நிறுத்தியது. பின்னர் நவம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் மற்றும் ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம்-2 ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் இது போன்ற சேவை மையங்களை ஆரம்பிக்கவேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

புரட்டாசி மாதத்திலும் இதே போன்ற சிக்கலை திருப்பதி தேவஸ்தானம் எதிர்கொண்டது. இலவச தரிசனத்திற்கு செல்பவர்கள் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ்சில் 40 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. அதையெடுத்து, விஐபி பிரேக் தரிசன நேரத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டாலும் பெரிய அளவில் பலனளிக்கவில்லை.

திருப்பதியில் பக்தர்கள் காத்திருப்பது, பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னை. புதிய தொழில்நுட்பங்களால் கூட இதை சரிசெய்ய முடியவில்லை என்பதுதான் ஆச்சர்யம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com