உதயநிதியின் டெல்லி விசிட் - கோ பேக் மோடி காலத்திலிருந்து வெகு தூரம் வந்திருக்கிறோம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்த கையோடு தமிழ்நாட்டில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட விஷயம், உதயநிதியின் டெல்லி விசிட். டெல்லியில் அவர் பிரதமரை சந்திக்கவிருப்பதாக திங்கள்கிழமையன்று செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் நேற்று பிரதமரை சந்தித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், பிரதமரும் விளக்கமளித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
கேலோ இந்தியா போட்டிகளை தமிழகத்தில் நடத்துமாறு கோரிக்கையும், தமிழ்நாட்டில் புதிய விளையாட்டு மைதானங்கள் அமைப்பது குறித்தும் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் பிரதமருடனான சந்திப்பு குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்திருக்கிறார்.
முன்னதாக இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்த உதயநிதி ஸ்டாலின், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். தமிழகத்தின் முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் பேத்தி பூஜா - சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர் மதியம் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு நிகழ்ந்தது. வழக்கமாக பிரதமர், மாநில முதல்வர்களைத்தான் அமர வைத்து பேசுவார். உதயநிதி ஸ்டாலின் ஒரு மாநில அமைச்சராக இருந்தாலும் ஒரு மாநில முதல்வருக்கான கௌரவத்தை பிரதமர் தந்திருப்பது சந்திப்புக்கு பின்னர் வெளியான புகைப்படங்களில் தெரிய வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலினை, ஒரு சாதாரண அமைச்சராக கருதாமல், ஒரு மாநில முதல்வரின் மகனாக மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான பிரமுகராக பிரதமர் நடத்தியிருக்கிறார். தி.மு.க மேலிடத்திற்கு மகிழ்ச்சியை தந்த வகையில், ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு மறக்கமுடியாது பரிசை பிரதமர் அளித்திருக்கிறார் என்கிறார்கள்.
கோபேக் மோடி காலத்திலிருந்து வெகு தூரம் வந்திருக்கிறோம். மத்தியில் நம்பர் ஒன் கட்சியான பா.ஜ.கவும், மாநிலத்தின் நம்பர் ஒன் கட்சியான தி.மு.கவும் தமிழகத்தின் நலனிற்காக இணைந்து செயல்படுவது நல்லதுதான் என்பதே சாமானியனின் பார்வையாக இருக்கிறது.