படிப்பதற்கு தடையில்லா மின்சாரம் - சோலார் மயமாகும் தெலுங்கானா பள்ளிக்கூடங்கள்
தெலுங்கானா முழுவதுமுள்ள அரசு பள்ளிக்கூடங்களில் 500க்கும் அதிகமான இடங்களில் சூரிய ஒளி ஆற்றல் மூலமாக மின்சாரம் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2023 இறுதிக்குள் 1521 அரசுப்பள்ளிகளுக்கு சோலார் பேனல் பொருத்துவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. க்ரீன் எனர்ஜி திட்டத்தின் முக்கியமான முன்னெடுப்பாக இது கருதப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் 3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆண்டு முழுவதும் 45 லட்சம் யூனிட் மின்சார உற்பத்திக்கு வாய்ப்பு உண்டு. தற்போது தெலுங்கானா மாநிலத்தில் அமலில் உள்ள மின்கட்டண முறையின் மூலம் கணக்கீடு செய்தால் ஆண்டுதோறும் ஏறக்குறைய 4 கோடி ரூபாய் சேமிக்க முடியும் என்கிறார்கள்.
சோலார் பேனல் ஒவ்வொன்றும் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடிய உழைப்பைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இத்திட்டத்திற்கான முதலீட்டை 5 முதல் 6 ஆண்டுகளில் திரும்ப எடுத்துவிடலாம். ஒவ்வொரு பள்ளிலும் 3 கிலோ வாட் முதல் 10 கிலோ வாட் வரையிலான மின்சார உற்பத்தி செய்யமுடியும்.
தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஏறக்குறைய 300 நாட்களும் சூரியன் உதிப்பதால் ஆண்டு முழுவதும் மின்சார உற்பத்தி செய்ய முடியும். மின்சாரத்தை பொறுத்த வரை தன்னிறைவு பெற்ற பள்ளியாக இயங்க முடியும். பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடும்போது மின்சார பயன்பாடு குறைவாக இருக்கும். அப்போது கிடைக்கும் மின்சார சக்தியை வேறு வழிகளுக்கு பயன்படுத்தவும் வழி செய்யப்பட்டுள்ளது.
சோலார் எனர்ஜி பற்றி மாணவர்களுக்கு அடிப்படை புரிதல் கிடைக்கும்போது அவர்களது வீடுகளிலும் சோலார் பேனல் அமைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இது தவிர மின்சாரத்தை சேமிப்பது, முறையான வழியில் பயன்படுத்தவது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் நடந்து வருகின்றன. மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்வதற்காக பல இடங்களில் மின்சார விளக்குகள், எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.
சூரிய ஒளியை பயன்படுத்துவதில் தெலுங்கானா மாநிலத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றுவதுதான் லட்சியம் என்கிறது தெலுங்கானா அரசு. ஏறக்குறைய 300 நாட்கள் சூரிய ஒளியை பெறும் வகையில் உள்ள தென்னிந்திய மாநிலங்களில் தெலுங்கானா முதலிடம் பெறுகிறது. அந்த வகையில் சோலார் எனர்ஜி சம்பந்தமான திட்டங்கள் நிச்சயம் கைகொடுக்கும் என்று நம்பலாம்