UGC
UGC

நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாக யுஜிசி அறிவிப்பு!

Published on

நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்கள் சட்ட விரோதமான முறையில் செயல்பட்டு வருவதாக யுஜிசி அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வரையறுத்துள்ளது. மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான வரைமுறைகளை விளக்கி உள்ளது. இந்த சட்ட முறைகளைப் பின்பற்றியே நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாடு முழுவதும் இயங்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் சில யுஜிசி சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் போலியாக இயங்கி வருவதாக யுஜிசி செயலாளர் மனீஷ் ஜோஷி அறிவித்துள்ளார்.

இது குறித்து யுஜிசி செயலாளர் மனீஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் செயல்பட்டு வரக்கூடிய பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை, போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது. பட்டம் வழங்குவதற்கான அதிகாரம் அவைகளுக்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு டெல்லியில் 8 பல்கலைக்கழகங்களும், உத்தரப்பிரதேசத்தில் 4 பல்கலைகழகம், மேற்குவங்கம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் 2 பல்கலைக்கழகமும், கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஒரு பல்கலைக்கழகமும் போலி என கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் புதுச்சேரியில் இயங்கி வரும் ஒரு உயர் கல்வி நிறுவனமும் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த போலி பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் கல்வி ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே மாணவர்கள் கல்வி நிலையங்களில் சேரும் போது யுஜிசி அங்கீகாரம் குறிப்பிட்ட இந்த கல்வி நிறுவனத்திற்கு உள்ளதா என்பதை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் படிப்புக்காக செலவிட்ட நேரமும், உழைப்பு வீணாகும்.

logo
Kalki Online
kalkionline.com