17 வயது வீணா ராணி உயிரிழப்பு
டெல்லி உயிரியல் பூங்காவில் மிகவும் பிரபலமான வீணா ராணி என்ற 17 வயது வெள்ளைப் புலி உயிரிழந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வீணா ராணி என்ற 17 வயது வெள்ளைப் புலி ஒன்றும் உள்ளது. அதைக் காணவும் நிறைய பள்ளி – கல்லூரி மாணவர்கள் வந்து செல்வது வழக்கம்.
இது தொடர்பாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்ததாவது:
வீணா ராணி என்ற வெள்ளைப் புலி, சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை (06.02.2023) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் உயிரியல் பூங்காவில் 3 வெள்ளைப் புலி குட்டிகள் பிறந்தது. அதில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு வெள்ளை புலி குட்டி இறந்தது. மற்ற இரண்டு குட்டிகளும் இதே போன்ற நோயின் அறிகுறிகளைக் காட்டினாலும், அவை இப்போது சிகிச்சைப் பெற்று குணமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், குட்டிகளின் மாதிரிகள் மரபணு கோளாறுகளை பரிசோதிக்க அனுப்பப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் மிருகக் காட்சிசாலையில் பிறந்த இந்த புலிக்குட்டிகளால் உயிரியல் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கையை 11 ஆக உயர்ந்தது. இவற்றில் குட்டிகள் உட்பட ஏழு புலிகள் வெள்ளை நிறத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
யாராலும் மறந்திருக்க முடியாது
டெல்லி உயிரியல் பூங்காவில் 2014ம் ஆண்டு நடந்த பயங்கர சம்பவம் யாராலும் மறந்திருக்க முடியாது.
ஹிமான்சு என்ற 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் இந்த உயிரியல் பூங்காவைப் பார்வையிட சென்றுள்ளார்.
அங்குள்ள வெள்ளைப் புலி இருந்த பகுதியில் புலியைப் பார்த்த உற்சாகத்தில் தனது நண்பர்களுடன் கூச்சல் போட்டுள்ளார் ஹிமான்சு. அப்போது கவனக் குறைவால் கால் தவறி எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவரைத் தாண்டி புலி இருந்த பகுதிக்குள் விழுந்து விட்டார் ஹிமான்சு.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹிமான்சுவின் நண்பர்கள் மற்றும் மற்ற பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குள்ளாக ஹிமான்சுவை நெருங்கி விட்டது புலி.. புலியை மிக நெருக்கத்தில் பார்த்த ஹிமன்சு பயந்து அலறினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களும், மற்ற பார்வையாளர்களும் ஹிமான்சுவைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். கல் மற்றும் குச்சி போன்றவற்றால் அடித்துப் புலியை விரட்ட முயற்சித்துள்ளனர். ஆனால் அவரை அந்தப் புலி பயங்கர கோபத்துடன் கடித்துக் குதறிக் கொன்ற பரிதாபம் அனைவரையும் உறைய வைத்து விட்டது.