டில்லியில் இளம் பெண்ணை இரு ஆடவர்கள் அடித்து வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளும் வீடியோ!
தேசியத் தலைநகர் டெல்லியில் ஒரு பெண்ணை அடித்து வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி மகளிர் ஆணையம் இதை கவனத்தில் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்திய வண்ணம் நேற்று முதல் வைரலாகி வருகிறது.
மொத்தம் 18 செகண்டுகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ காண்போரை மனம் பதைக்கச் செய்கிறது. ஹரியானா பதிவு எண்ணைக் கொண்ட ஒரு டாக்ஸியில் இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணை அடித்து வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி இழுத்துச் செல்வதைக் காணலாம்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதும், டெல்லி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை துணை ஆணையர் ஹரேந்தர் குமார் சிங் கூறுகையில், வீடியோவில் காணக்கூடிய ஓட்டுநரையும் வாகனத்தையும் தற்போது நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
சம்பவ தினத்தன்று "ரோகிணியில் இருந்து விகாஸ்புரிக்கு உபேர் மூலம் செல்வதற்காக அந்தக் கார் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழியில் அவர்களுக்குள் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டதை ஒட்டி நடந்த சம்பவம் தான் அது" என்று டிசிபி கூறினார்.
அவர்களுக்குள் நடந்த கைகலப்பு மற்றும் வாக்குவாதத்தை சாலையில் அப்போது யாரோ ஒருவர் பார்த்து விட்டு இதில் ஏதோ அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு இருப்பதாகக் கருதி அதை வீடியோவாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் கசிய விட்டுள்ளார். அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தின் பின் அந்த இளம்பெண் காருக்குள் இருந்து வெளியேற முயன்ற போது உடனிருந்த இளைஞர்களில் ஒருவர் அதை மறுத்து அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து காருக்குள் தள்ள முயன்றிருக்கிறார். உடனிருந்தவர் அவருக்கு உதவினார். இது தான் அந்த வீடியோவில் பதிவான காட்சி என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
இதற்கிடையில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவாலும் இந்தச் சம்பவத்தை கவனத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையைக் கோரி டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
“இளம்பெண்ணை சிலர் காரில் கடத்திச் சென்றது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. காருக்குள் அமரச் சொல்லி ஒரு இளம்பெண்ணை ஒரு இளைஞர் வலுக்கட்டாயமாக அடித்து வற்புறுத்தி காருக்குள் தள்ளுகிறார். அதற்கு மற்றொரு நபர் உதவுவதை அந்த வீடியோவில் காண முடிகிறது சம்மந்தப்பட்ட வீடியோ டெல்லியின் மங்கோல்புரி ஏரியாவில் பதிவானதாகக் கூறப்படுகிறது. இது மிகவும் தீவிரமான விஷயம்" என்று மலிவால் நோட்டீஸில் தெரிவித்துள்ளார்