தனியார் நிறுவனங்களின் ‘வொர்க்கிங் கல்ச்சர்’ குறித்து கடுமையான விவாதங்களைக் கிளப்பி விட்ட வைரல் புகைப்படம்!
ஆட்டோவில் மயங்கிக் கிடக்கும் ஊழியரின் புகைப்படத்தைப் பகிர்ந்து பாராட்டியிருந்தார் ஒரு CEO, அது நெட்டிஸன்களால் பலப்பல விதமாகப் புரிந்து கொள்ளப்பட்டு வொர்க்கிங் கல்ச்சர் (பணி கலாச்சாரம்) பற்றிய விவாதத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது.
பாம்பே ஷேவிங் கம்பெனியின் (BSC) CEO சாந்தனு தேஷ்பாண்டே, சமீபத்தில் லிங்க்டு இன் இணையதளத்தில் BSCயின் விற்பனைத் தலைவர், ஊழியர்களின் தலைவர் மற்றும் மக்கள் குழுத் தலைவர் ஷங்கி சவுஹானைப் பற்றி ஒரு புகைப்பட இடுகையிட்டார். அந்தப் புகைப்படத்தில் சௌஹான் தனது பணியில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் பாருங்கள் என்று பாராட்டுதலாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இவரைப் போன்றவர்கள் தான் "நிறுவனத்தின் இதயத் துடிப்பாக" கருதப்படுகிறார்கள் என்றும் கூறி இருந்தார்.
சில ஊழியர்கள் தங்கள் கடமைக்கு அப்பாற்பட்டு, சாத்தியமற்றதாகத் தோன்றும் பணிகளைச் சாதிக்கிறார்கள். அவர்கள் ஒரு நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை நிர்வகிக்க முனைகிறார்கள். ஆனால் மறுபுறம், இதற்காக அவர்களின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் எத்தனையோ விதமாக அவர்களால் சமரசம் செய்யப்படுகிறது.
பணிச்சுமை தாங்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சில ஊழியர்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் முற்றிலுமாகக் கெடும் போது வேலையை விட்டே ஆகவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். சிலரோ துரதிருஷ்டவசமாக பணி அழுத்தத்தின் காரணமாக உடல் ஆரோக்யம் கெட்டு வேலையில் இருக்கும் போதே ஹார்ட் அட்டாக் என்று திடீரென்று பரிதாபமாக இறந்து விடும் சூழலும் இங்கு நேர்ந்து விடுகிறது. கம்பெனி காம்பன்சேஷன் தரலாம். ஆனால், போன உயிரை மீட்டெடுக்க முடியாதே! - என்கிறார்கள் சிலர்.
சிலரோ, நான் இத்தனை நீண்ட நெடிய ஆண்டுகள் கடுமையாக உழைத்தும் கூட என் நிறுவனம் எனக்கு அளித்தது ! எனும் ரீதியில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு நிறுவனத்தின் CEO எனும் நிலையில் சாந்தனு தேஷ்பாண்டே பகிர்ந்திருந்த புகைப்படம் தனது ஊழியரைப் பாராட்டுவதற்காகவே என்றாலும் கூட அது காண்போர் மனநிலைக்கு ஏற்ப நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பலத்த விவாதங்களைக் கிளப்பி விட்டிருப்பது வாஸ்தவம்!