எச்சரிக்கை! அதிகரித்து வரும் கல்லீரல் நோய்கள்... ஆல்கஹால் 20% மட்டுமே காரணம், மீதி 80%?
கேரளாவில் சமீப காலங்களில் தொடர்ந்து கல்லீரல் நோய்களும் அது தொடர்பான மரணங்களும் அதிகரித்து வருவதால், சுகாதார நிபுணர்கள் வாழ்க்கை முறை மாற்றத்தின் அவசியம் மற்றும் உணவு முறை மாற்றம் குறித்துப் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்படும் போதே அலட்சியப்படுத்தாமல் அதற்குத் தேவையான பொதுவான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள் என கேரள மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், மது அருந்துதல் போன்றவற்றால் கல்லீரல் நோய்கள் ஏற்படலாம். ஆனால், பெரும்பாலான மக்கள் மது அருந்துவதால் மட்டுமே கல்லீரல் நோய் வரும் என்று தவறான கருத்து கொண்டிருக்கின்றனர். இதற்கு உதாரணமாக சமீபத்தில் நிகழ்ந்த ஊடகவியலாளரும், நடிகையுமான சுபி சுரேஷின் மரணத்தைக் கூறலாம். அவர் கல்லீரல் நோயால் மரணமடைந்தது அந்த நோய் குறித்த விழிப்புணர்வை மாநிலம் முழுவதும் எழுப்பி இருக்கிறது என்றால் மிகையில்லை.
கேரளாவில் பரவலாக காணப்படும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (Non-alcoholic fatty liver disease), ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். திருவனந்தபுரத்தில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 25 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களிடமிருந்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் பார்த்தால் கேரளாவில் நடத்தப்பட்ட சமீபத்திய மக்கள்தொகை அடிப்படையிலான ஆய்வில், கேரள மக்களிடையே NAFLD பாதிப்பு சுமார் 50% என்று கண்டறியப்பட்டது. அதாவது கேரளாவின் மொத்த மக்கள் தொகையில் இரண்டில் ஒரு பங்கினருக்கு இன்று இந்த நோயின் தாக்கமானது ஆரம்ப நிலை அறிகுறியிலோ அல்லது முற்றிய நிலையிலோ இருக்கிறது என்று பொருள். இது தேசிய சராசரியை விட அதிகம் என்று கருதுகிறார்கள் அம்மாநில மருத்துவர்கள்.
கேரளாவில் 90% கல்லீரல் நோய் வழக்குகள் நீரிழிவு, கொழுப்பு கல்லீரல், ஹெபடைடிஸ் மற்றும் குடிப்பழக்கம் போன்ற வாழ்க்கை முறை நோய்களால் ஏற்படுகின்றன. “மது அருந்துவதால் மட்டுமே கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன என்ற தவறான கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால், இங்கு இதுவரை நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில் 20-25% மட்டுமே குடிப்பழக்கத்தால் செய்யப்பட்டவை. 60%-75% மற்ற காரணங்களால் ஏற்பட்டது. அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கையின் அடிப்படையே பெரும்பாலும் உட்கார்ந்து கொண்டே செய்யக்கூடிய வேலை மற்றும் கடின உழைப்பில்லாத உடலை அலட்டிக் கொள்ளாத வாழ்க்கை முறை மாற்றமே என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆல்கஹால் மட்டுமே கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும், நமக்கெல்லாம் இது வராத எனும் தவறான எண்ணமே நோயாளிகள் தங்கள் நோயை மறைக்கவும் வழிவகுக்கிறது. “மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஒருவர் மது அருந்தாததால், இதுபோன்ற நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதாக அர்த்தமில்லை,'' என்று கூறுகிறார்கள் கேரள மருத்துவர்கள்.
சிகிச்சை முறை குறித்து கேட்டபோது, நல்ல உணவுப்பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். “நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால், உணவு, உடல் பருமன் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். கல்லீரல் செயலிழப்பின் கடுமையான நிலையை எட்டிய நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையே சிறந்த வழி” என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் ஆபத்து காரணிகள் குறித்து கேட்டபோது, மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிபுணர்களால் அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் ஆபத்து காரணிகள் குறைவாக இருப்பதாக அவர் பதிலளித்தார்.
இந்த நோய் சிகிச்சையின் "மிக முக்கியமான காரணி ஒரு சிறந்த நன்கொடையாளரைக் கண்டுபிடிப்பதாகும். இதுவரை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் 80% முதல் 85% ஆக இருக்கிறது,” என்று கேரள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.