‘மக்களின் ஆதரவோடு போதைப் பொருட்களுக்கு முடிவு கட்ட வேண்டும்’ சத்தீஸ்கர் முதல்வர் பேச்சு!

‘மக்களின் ஆதரவோடு போதைப் பொருட்களுக்கு முடிவு கட்ட வேண்டும்’ சத்தீஸ்கர் முதல்வர் பேச்சு!

து உள்ளிட்ட போதைப் பொருட்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகின்றன. கள்ளச் சாராயம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரசே நடத்தும் மது கடைகளாலும் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டதோடு, ஏராளமான உயிரிழப்புகளும் தினம் தினம் நடைபெற்று வருகின்றன. இதனால் பெருவாரியான மாநிலங்களில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

 இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் நேற்று ராய்பூரில், ‘போதையில்லா சத்தீஸ்கர்’ என்ற போதை ஒழிப்பு பிரச்சார நிகழ்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “போதைப் பழக்கம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது ஒருபோதும் நல்லதல்ல. அவை தீமையை மட்டுமே ஏற்படுத்தும். இது,  உடல் மற்றும் மன ரீதியாகவும் மிகவும் தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி, தனி நபர், குடும்பம் என ஒட்டுமொத்த சமூகத்தையுமே இது பாதிக்கிறது. கொரோனா லாக்டவுனின்போது அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட்டன. ஆனாலும், மக்கள் பல்வேறு வழிகளில் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதைக் காண முடிந்தது. அது மட்டுமின்றி, போலி மது மற்றும் பிற போதைப்பொருட்களால் மக்கள் இறப்பதைக் கண்ட பிறகும், மதுவிலக்கை அமல்படுத்த எனக்குத் தைரியமில்லை.

போதைப் பொருட்களைத் தடை செய்யும் விஷயத்தில், ஆண்கள் மட்டுமே அவற்றை உட்கொள்வதைப் போல, பெண்கள் அதைத் தடைசெய்யச் சொல்கிறார்கள். மேலும், மதுவுக்குத் தடை விதிப்பது குறித்து பெண்களிடம் கேட்டால், இரு கைகளையும் உயர்த்துகிறார்கள். அதுவே புகையிலை போன்ற உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் போதைப் பொருட்களையும் தடை செய்யலாமா என்று கேட்டால் பெண்கள் கையைத் தூக்குவதில்லை. எனவே, மதுவுக்கு எதிராக மட்டுமல்லாமல், அனைத்து வகையான போதைப்பொருட்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் இருக்க வேண்டும். மேலும், மக்களின் ஆதரவுடன் இந்த சமூக தீமைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்" என்று பேசினார்.

கடந்த 2018ம் ஆண்டு சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, ‘தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com