
கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
வருகிற மாநில பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று அமைச்சர் ஒருவர் சூசகமாக இதை குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. அங்கு இப்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, பெங்களூரு பேலஸ்
மைதானத்தில் பங்கேற்ற பேரணிக் கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது மகளிர்க்கு என தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டும். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும். இந்த தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். மோடியின் ஆட்சியில் எல்.பி.ஜி. விலை உயர்ந்துவிட்டது, விலைவாசியும் உயர்ந்து வருகிறது. பெண்கள் வீட்டுச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் சுமையை சந்தித்து வருகின்றனர். அவர்களின் சுமையை போக்குவதற்கு இந்த தொகை பயன்படும் என்று கூறினார். அவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியைப் போலவே, ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கும் ஒரு திட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதாவது ஏழைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை வருகிற பட்ஜெட்டில் அறிவிக்க பொம்மை அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இது குறித்து மாநில அமைச்சர் ஒருவர் கூறுகையில், மகளிர்க்கு மாதம் ரூ.2,000 அளிக்கும் திட்டத்துக்காக தேர்தல் வரை மக்கள் காத்திருக்க வேண்டியதில்லை. வரும் பட்ஜெட்டிலேயே இதற்கா அறிவிப்பு வெளிவரும். உடனடியாக அது செயல்படுத்தப்பட்டு பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை கர்நாடக தேர்தலையொட்டி பா.ஜ.க. அரசு பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை அறிவிக்குமானால், இந்த ஆண்டு 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் மற்ற மாநிலங்களில் இதேபோன்ற அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தலில் வாக்காளர்களை கவருவதற்காக இலவசங்களை வழங்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இலவசங்களால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.