
ஸ்ரீமுஷ்ணம் பெருமாள் மாசி மக தீர்த்தவாரி புறப்பாடு இரண்டு நாட்கள் முன்பு இனிதே நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, கிள்ளையை அடுத்த பிச்சாவரம் பகுதி கடலில் நடந்தது. இந்நிலையில் கிள்ளை தர்காவில் இஸ்லாமியர்கள் ஸ்ரீவராக பெருமாளை வரவேற்று, உலக நன்மைகளை வேண்டி பிரார்த்தனை செய்த வீடியோ வெளியாகி இணையவாசிகளின் பாராட்டை பெற்று வருகிறது.
கடலூர் ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமகப்பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் 27 நாட்கள் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் மாகாத்மியம் என்று குறிப்பிடப்பட்ட இந்த உற்சவத்தில் சிதம்பரத்தில் இருந்து நடராஜரும், ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து பூவராகசாமியும் கிள்ளைக்கு வந்து தீர்த்தவாரி தந்து, ஒரு நாள் இரவு தங்கும் உற்சவம் பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தில் சமுத்திர தீர்த்தவாரி கிள்ளையில் நடைபெற்று வருகிறது. தீர்த்தவாரி முடிந்ததும், பூவராக சாமி முத்து பல்லக்கில் வீதி உலா தொடங்குவார். முதலில் மகத்துவாழ்க்கை மண்டகப்படியும், இரவு தில்லைவிடங்கனில் தங்குவதும் நடைபெறும். பின்னர் புவனகிரி, கானுர், ராமாபுரம், கவரப்பாளையம் போன்ற பகுதிகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் தங்கி, ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்கு எழுந்தருளுவார்.
மாசி மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இத்திருவிழா, கடலூர் மாவட்டத்தின் முக்கியமான திருவிழாவாகும். ஸ்ரீமுஷ்ணம் வராகப்பெருமாள், சிதம்பரம் நடராஜர் மட்டுமல்ல சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இருந்தும் உற்சவ மூர்த்திகள் கிள்ளை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு சமுத்திர தீர்த்தவாரி நடைபெற்று வந்தது. காலப்போக்கில் மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தாலும், கிள்ளையில் போதிய தங்குமிடங்கள் இல்லாத காரணத்தால் தற்போது விழா எளிமையாக நடத்தப்பட்டு வருகிறது,
இந்நிலையில் கிள்ளை வந்த ஸ்ரீமுஷ்ணம் வராகப்பெருமாள் உற்சவருக்கு இஸ்லாமியர்கள் சார்பில் உற்சாகத்தோடு வரவேற்பு அளிக்கப்பட்டது. கிள்ளை தர்காவில் ஷால் மரியாதையுடன் பெருமாளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை மரியாதை மற்றும் அனுக்ரஹத்தை மேன்மையாக ஏற்று எல்லோருடைய பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுமாறு வேண்டினார்கள்.
உலக நன்மைக்காகவும், சமூக அமைதி நிலவுவதற்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது. பெருமாளுக்கு இஸ்லாமியர்கள் மரியாதை செலுத்தி பிரார்த்தனை செய்வது பல ஆண்டுகளாக நீடித்தாலும் இம்முறை வீடியோ வைரலாகி, பெரிய அளவில் கவனத்தை பெற்றிருக்கிறது.