தில்லி விபத்தின் போது சுற்றிய 9 ரோந்து வாகனங்கள் என்ன செய்தன? விசாரிக்க முடிவு!

அஞ்சலி
அஞ்சலி

தில்லியில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அஞ்சலி என்ற பெண், கஞ்சாவாலா என்னும் பகுதியில் காரின் அடிப்பகுதியில் சிக்கி சுமார் 12 கி.மீ. தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டரில் சென்ற அந்த பெண் மீது ஒரு கார் மோதியது. இதன் விளைவாக கீழே விழுந்த அந்த பெண் காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். கொஞ்சம் தொலைவு சென்றபின் காரில் பெண் சிக்கியிருப்பதை அறிந்த காரில் வந்த நபர்கள் அப்பெண்ணை அப்படியே சாலையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

20 வயதான அஞ்சலி தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த தகவல் வேகமாக பரவியதை அடுத்து போலீசார் இது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஸ்கூட்டரில் அஞ்சலியுடன் நிதி என்ற பெண் சென்றதும், விபத்துக்கு பின் அவர் யாரிடமும் சொல்லாமல் நழுவிச் சென்றுவிட்டதும் தெரியவந்தது. பின்னர் நிதி கொடுத்த வாக்கு மூலத்தில் “கார் எங்கள் மீது மோதியதும் நான் கீழே விழுந்துவிட்டேன். அஞ்சலி காரின் அடியில் சிக்கிக் கொண்டார். இது காரில் இருந்தவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் அஞ்சலியை இழுத்துச் சென்றனர். மேலும் அஞ்சலி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினார். நான் ஓட்டுகிறேன் என்று சொல்லியும் கேட்கவில்லை. கொடூர சம்பவத்தை பார்த்ததும் எனக்கு பயமாக இருந்ததால் நேரடியாக வீட்டிற்கு சென்றுவிட்டேன்” என்று கூறியிருந்தார்.

இதனிடையே தில்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர்.

2012 ஆம் ஆண்டில் தில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிர்பயா என்ற பெண்ணின் தாயார் ஆஷா தேவியும் அஞ்சலியின் தாயார் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். இந்த விவகாரத்தில் யார் மீதும் நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. ஆனால், நிதி கூறிய வாக்குமூலத்தை ஏற்க முடியாது. அஞ்சலியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் “நிதி யார் என்பதே எனக்குத் தெரியாது. அஞ்சலிக்கு குடிப்பழக்கம் கிடையாது. நிதி சொல்வதை ஏற்கமுடியாது. இது ஏதோ சதித்திட்டம் போல் தெரிகிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று அஞ்சலியின் தாயார் கூறியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் தீபக் கன்னா, அமித் கன்னா இருவரும் அந்த காரை நண்பரிடமிருந்து டிச. 31 ஆம் தேதி இரவல் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புதிய திருப்பமாக கஞ்சாவாலா விபத்து தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு போலீஸ் ஆணையர் ஷாலினி சிங், சுல்தான்புரி போலீஸ் நிலையத்துக்கு சென்று வழக்கு தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தார். விபத்து சமயத்தில் அந்த வழியாக 9 ரோந்து வாகனங்கள் சென்றுள்ளன. ஆனால், யாரும் இதை கண்டுகொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது. இது குறித்து தில்லி போலீஸாரிடம் உரிய விசாரணை நடத்தப்படும். முழுமையான விசாரணைக்கு பிறகு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்ட 12 கி.மீ. தொலைவை ஷாலினி சிங் ஆய்வு செய்தார். மேலும் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை கேட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com