கோதுமை விலை குறைப்பு: மாவு ஆலை கூட்டமைப்பு தகவல்!
மத்திய அரசின் நடவடிக்கையால், கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூ 6 முதல் ரூ 8 வரை குறைந்துள்ளது என இந்திய மாவு ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோதுமை விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கா, 50 லட்சம் டன் கோதுமையை பொதுச்சந்தையில் விற்க மத்திய அரசு கடந்த ஜனவரியில் நடவடிக்கை மேற்கொண்டது. இதில், 45 லட்சம் டன் கோதுமை, மாவு ஆலைகள் உட்பட பெரும் நுகர்வோருக்கானதாகும்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை கடந்த 2 மாதங்களில் கிலோவுக்கு ரூ 6 முதல் ரூ 8 வரை குறைந்துள்ளது.
அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு மட்டுமல்லாமல், பிரட், பிஸ்கட் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளது.
கடந்த ஜனவரியில் கோதுமை மாவு குவிண்டாலுக்கு ரூ 3,400 முதல் ரூ 3,800 வரை இருந்தது. இப்போது ரூ 2,600 முதல் ரூ 3000 வரை குறைந்துள்ளது.
கோதுமை மற்றும் கோதுமை பொருட்கள் மீதான ஏற்றுமதி தடை 2023- 2024 நிதியாண்டிலும் தொடர வேண்டும். நடப்பு பயிர் ஆண்டில் கோதுமை உற்பத்தி 106 மில்லியன் டன் முதல் 110 மில்லியன் டன் வரை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.