தேசிய பூண்டு தினம், ஏன் கொண்டாடப்படுகிறது?

தேசிய பூண்டு தினம், ஏன் கொண்டாடப்படுகிறது?

ஏப்ரல் 19

சமையலில் பூண்டைச் சேர்க்காதவர்கள் வெகு சிலரே. சுவை மட்டுமல்ல; ஏராளமான மருத்துவ குணங்களும் நிரம்பியது பூண்டு. இதன் மகத்துவத்தைப் பரப்பவும், பயிரிடும் ஆலோசனைகள் வழங்கவும் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.

பூண்டின் பூர்வீகம் ஆசியாக் கண்டம்தான். உலகிலேயே அதிகமாகப் பூண்டை விளைவிக்கும் நாடு சீனா. 6000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பூண்டின் உபயோகம் தெரிந்திருந்தது. பூண்டைப் பற்றிய ஆச்சரியத் தகவல் ஒன்று சொல்லட்டுமா? கி.மு 2560ல் வாழ்ந்த எகிப்தியர்கள்,  மிகப் பெரிய காஸா பிரமிட் என்ற ஒன்றைக் கட்டும் தொழிலாளர்களுக்கு, அதிக அளவில் உண்ணக் கொடுத்தது பூண்டுதான். களைப்பும் நோயும் அண்டாமல் கட்டுமானத் தொழிலாளர்கள் பணிபுரிவதற்காகக் கொடுக்கப்பட்டதாம்!

பூண்டில் அதிக அளவில் புரதம் இருக்கிறது. வைட்டமின்கள் A, B1 மற்றும் C ஆகியன இருக்கின்றன. கால்சியம், மகனீசியம் மற்றும் இரும்புச் சத்து இருக்கிறது. மேலும் 17 வகையான அமினோஅமிலங்களும் இருக்கின்றன.

பூண்டு உடம்பில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது; ஆயுளை நீடிக்கிறது; சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது; சில தோல் வியாதிகளுக்கும், பல் வலிக்கும்கூட மருந்தாகிறது; சளி, இருமலைக் கட்டுப்படுத்துகிறது; சோர்வைக் குறைக்கிறது. பால் வேட்கையை இது தூண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள். தீய ஆவிகளை ஓட்டும் சக்தி பூண்டுக்கு இருக்கிறது என்று சில மதங்கள் சொல்கின்றன.

எல்லாம் சரிதான்! பூண்டு சாப்பிட்டுவிட்டுச் சரியாக வாய் கொப்பளித்தாலும், பூண்டு சாப்பிட்டிருக்கும் விஷயத்தை நீங்கள் சொல்லாமலே பலரும் தெரிந்துகொள்வார்கள். காரணம் ரத்தத்தில் கலந்த பூண்டின் வேதிப்பொருட்கள், சுவாசத்திலும் வியர்வையிலும் வெளியாவதுதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com